மெட்டாவின் புதிய கூட்டாளி

ஸ்கேல் ஏஐ நிறுவனத்தின் 49 விழுக்காடு பங்கை வாங்கியிருக்கிறது மெட்டா நிறுவனம். மெட்டா வாங்குமளவிற்கு அந்த நிறுவனத்தை வளர்த்தெடுத்திருக்கிறார் 27 வயதாகும் அலெக்சாண்டர் வாங். யார் இந்த அலெக்சாண்டர் வாங், அவரது நிறுவனம் என்ன செய்துகொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வோம்.

அலெக்சாண்டர் வாங் மெக்சிகோவின் லாஸ் அலமோஸில் 1997ம் ஆண்டு பிறந்தவர். வாங்கின் தாய் தந்தை இருவருமே லா​ஸ் அலமோஸ் ஆய்வ​கத்தில் இயற்பியல் ஆய்வாளர்களாக பணியாற்றியுள்ளனர். அதனாலோ என்னவோ, இளம் வயதிலிருந்தே அறிவியல், கணினி நிரலாக்கத்தில் மீது அலாதியான ஆர்வம் கொண்டிருந்திருக்கிறார்.  வாங் படிப்பை முடித்த பிறகு சில நிறுவனங்களில் வேலை பார்த்திருக்கிறார். அந்த அனுபவங்களையும், தனது கணினி மீதான ஈடுபாட்டையும் கொண்டு 19 வயதில் ஸ்கேல் ஏஐ நிறுவனத்தை தொடங்கினார்.

செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளை உருவாக்குவதற்கான தரவு குறிச்சொல்லிடல்,  மாதிரி மதிப்பீட்டுச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகும். 2021ல் இந்த நிறுவனத்தின் மதிப்பீடு 7.3 பில்லியன் டாலரை எட்டியது. ஓபன்ஏஐ, பேபால், பின்டெரெஸ்ட், சாம்சங்,  டொயோட்டா, உபர் போன்ற முன்னணி நிறுவனங்கள்​ ஸ்கேல் ஏ​ஐயின் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். 

ஸ்கேல் ஏஐ நிறுவனத்துக்கும் அமெரிக்க ஆயுதப்படைக்கும் இடையே பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருக்கின்றன. இராணுவ திட்டமிடல் செயல்முறைகளுக்காக மொழி மாதிரிகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதே​ இந்த ஒப்பந்ததி​ன் நோக்கம். அதன்பிறகு ஜனவரி 2025ல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பதவியேற்​பு விழாவில் பங்கேற்றவர், ஏஐ போட்டியில் அமெரிக்கா வெற்றி பெற வேண்டும் எனக் கூறியதாகத் தகவல்கள் உள்ளன. `செயற்கை நுண்ணறிவு தரவுகளே நாட்டின்​ மூலதனம், அவை பெட்ரோலியத்தைப் போல முக்கியத்துவம் வாய்ந்தவை. செயற்கை நுண்ணறிவைத் தேசப் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பயன்படுத்த வேண்டும்` என்பதே அலெக்சாண்டரின் பார்வையாக இருக்கிறது.

ஜூன் மாதத்தில், மெட்டா நிறுவனம் ஸ்கேல் ஏஐயில் 49 விழுக்காடு பங்குகளை 14.3 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது. இது மெட்டாவின்  வெளிநிறுவன முதலீடுகளில் மிகப்பெரியதாகும். இந்த ஒப்பந்தம் செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஒரு முக்கியமான மைல்கல்லாக கருதப்படுகிறது. இந்த ஒப்பந்தம் காரணமாக, ஸ்கேல் ஏஐயின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான அலெக்சாண்டர் வாங், இப்போது முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி ஆகியிருக்கிறார். ஆனால் மெட்டா அவரை அப்படியே விட்டுவிடவில்லை. அவர் மெட்டா கட்டமைத்து வரும் மீநுண்ணறிவு தொழில்நுட்பத்தை வழிநடத்த உள்ளதாக மெட்டா கூறியுள்ளது. 

மைக்ரோசாப்ட்க்கு ஓப்பன்ஏஐ, அமேசானுக்கு ஆந்த்ரோபிக் போல இப்போது மெட்டாவிற்கு ​ஸ்கேல் ஏஐ என்ற நிலை உருவாகியிரு​க்கிறது.

  • மு. இசக்கிமுத்து

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now