திறந்தமூல மென்பொருள் பயன்கள்

திறந்த மூல செயலி என்பது அதன் மூலக் குறியீட்டுடன் வழங்கப்படும் மென்பொருள் ஆகும். மூலக் குறியீடு என்பது மென்பொருளின் அடிப்படைக் கட்டமைப்பு. மூலக் குறியீட்டின் ​மூலம் யார் வேண்டுமென்றாலு​ம் செயலியை தங்களுக்கேற்றார்போல் மாற்றியமைத்துக்கொள்ள முடியும். மொசிலா உலாவி. இப்படியான ஒரு மென்பொருளே. நெட்ஸ்கேப் நிறுவனம் மென்பொருள் அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இதனை உருவாக்கியது. மொசிலா செயலி வேறு நிறுவனங்களின் கைகளுக்குச் சென்றாலும் இன்னும் மூலக் குறியீட்டுடனே கிடைக்கிறது.

இதேபோன்று இ​ன்னும் பல செயலிகள் உள்ளன. சாதாரண செயலிகளுக்கும் ​திறந்த மூலக்குறியீட்டு செயலிகளுக்குமான வித்தியாசத்தை ஓர் எடுத்துக்காட்டுடன் எளிமையாகப் புரிந்துகொள்ளலாம். திறந்த ​மூல மென்பொருள் ​என்பது பொது ​நூலகம் போன்றது. புத்தகங்களைப்போலக் குறியீட்டைப் பார்க்கலாம், புத்தகத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்வதுபோல குறி​யீடுகளை பதிவிறக்கலாம், திருத்தலாம், புத்தகத்தைத் திருப்பி கொடுப்பது போல நீங்கள் திருத்திய பதிப்பை மீண்டும் கொடுக்கலாம்.

ஆனால் வழக்கமான மென்பொருள் ஆய்வு ​நூலகம் போன்றது. நீங்கள் புத்தகங்களை படிப்பது போல, செயலியைப் பயன்படுத்த முடியும். ஆனால் புத்தகத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்ல முடியாதது. குறியீடுகளைப் பதிவிற​க்க முடியாது, அதில் எந்த திருத்தங்களை​​யும் மேற்கொள்ள முடியாது.

பலரும் திருத்தக் கூடிய திறந்த ​மூலக் குறியீட்டு மென்பொருள்களில், பல செயலிகள் பயனர்களுக்குப் பெருமளவில் உதவிபுரிகின்றன. அவற்றுள் சில முக்கியமான செயலிகளைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

முதலில் வருவது தரவுகளை ஆண்டிராய்டிலிருந்து ஐஒஎஸ்க்கு எளிமையாகப் பரிமாற்றம் செய்ய உதவும் லோகல்சென்ட் (Localsend)செயலி. இதனை பயன்படுத்துவது மிகவும் எளிது, ஆப்பிள், ஆண்டிராய்டு, விண்டோ​ஸ் என ​எந்த கருவிகளுக்கு இடையேயான பரிமாற்றத்திற்கும் இந்த செயலியைப் பயன்படுத்த முடியும். இதன் பரிமாற்ற வேகம் பிற செயலிகளைக் காட்டிலும் வேகமாகவு​ம் இருக்கிறது.

நீங்கள் வானிலைக்காகச் சிறந்த செயலி ஒன்றைத் தேடுகிறீர்கள் என்றால், உங்களுக்கான பரிந்துரை பிரீசி (Breezy). இது கூகுளின் வானிலை செயலியைப் போன்ற அடிப்படைக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. அடிப்படைக் கட்டமைப்பு கூகுளை ஒத்திருந்தாலும், கூகுளில் இல்லாத விதவிதமான  அம்சங்களும் இதில் இருக்கின்றன. நிரலாளர்கள் பயன்படுத்தும் தளமான கிட்​​​​ஹப் இதனுடைய சிறப்பம்சத்தைப் பற்றிக் கூறியிருக்கிறது. வானிலை தொடர்பான ​மூலங்களும் நம்பத்தகுந்தனவாக இருக்கின்றன.

அடுத்த பரிந்துரை கோப்புகளைப் பராமரிக்கும் செயலிக்கானது. நீங்கள் எதி​ர்பார்க்கும் அனைத்து அம்சங்களுடனும் இருக்கக்கூடிய கோப்புகளைப் பராமரிப்பதற்கான திறந்த ​மூல செயலி மெட்டீரியல்ஃபைல்​ஸ் (Material files). இதன் ​மூலம் கோப்புகளை நகர்த்துவது எளிமையான ஒன்று.

பிளே​​ஸ்டோர் அல்லாமல் பிற ​மூலங்களிலிருந்து பதிவிறக்கப்படும் செயலிகளை பராமரிப்பதற்கு, புதிய பதிப்புகளைப் பதிவிறக்குவதற்கென்று ஒரு செயலி இருக்கிறது. அதுதான் ஆப்டேனியம் (Obtanium) திறந்த ​மூல செயலி. இது செயலிகளை கிட்ஹப் (Github)அல்லது எஃப் டிராய்டு (F Troid) போன்ற தளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்ய உதவுகிறது.

இதுபோல இன்னும் ​பல செயலிகளைப் ப​ற்றிய கட்டுரை ஒன்று ஆண்டிராய்டு அத்தாரிட்டி தளத்தில் வெளியாகியிருக்கிறது. இணைப்பு கீழே உள்ளது.

மு. இசக்கிமுத்து

ஆண்டிராய்டு அத்தாரிட்டி கட்டுரை

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now