விரல் நுனியில் வண்டிப்பயணம்

அண்மையில், டெல்லியில் ஒரு பெண் தெரு நாய்களுக்குப் பயந்து ஓலா இருசக்கர வாடகை வண்டியை  வெறும் 180 மீட்டருக்காகப் பயன்படுத்திய சம்பவம்  சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை பெற்றது. ஓலா, உபர், ராபிடோ போன்ற செயலிகள் நகர்ப்புற வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாகிவிட்டன. ஆட்டோவிற்காக காத்திருந்த நிலை மாறி, நினைத்த நேரத்திற்கு வாடகைக்கு வாகனத்தை வரவழைத்து பயணம் செய்யும் வசதி இன்று நம்மிடம் உள்ளது.

bike taxi

இவ்வகைச் செயலிகளை எளிதாகக் திறன்பேசியில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். பயணம் செய்ய விரும்பும் நபர், தனது தொலைபேசியில் செயலியைத் திறந்து, தானிருக்கும் இடத்தையும் செல்வதற்கான இடத்தையும் உள்ளீடு செய்து, இருசக்கர வண்டி, ஆட்டோ அல்லது கார் போன்ற வாகன வகைகளை தேர்ந்தெடுத்தால் போதும். அருகிலுள்ள ஓட்டுநர் சேவையை ஏற்று வருவார்; ஜிபிஎஸ் மூலமாக பயண நேரம், வழித்தடம், கட்டணம் போன்ற தகவல்களும் கணிக்கப்படுகின்றன. பயணம் முடிந்தவுடன் பணம் செலுத்த பல்வேறு வழிகள் உண்டு; ஒவ்வொரு பயணத்திற்கும் மதிப்பீடு வழங்கலாம்.

இந்த வசதிகள் நம் நேரத்தை மிச்சப்படுத்தி வாழ்க்கையை எளிமையாய் மாற்றியுள்ளன. வயதானோர், குழந்தைகள், அல்லது சொந்த வாகனம் இல்லாதவர்களும் இவற்றை எளிதாக பயன்படுத்த முடிகிறது. மேலும், மின்னணு கட்டண வசதி, மதிப்பீடு, வெளிப்படையான ஓட்டுநர் விவரங்கள் போன்றவை நம்பிக்கையையும் பாதுகாப்பு உணர்வையும் அதிகரிக்கின்றன. எனினும், இந்த வசதிகளுக்கு எதிர்விளைவுகளும் உள்ளன. குறுகிய தூரத்திற்கும் வாகனம் அழைக்கும் பழக்கத்தால், நடைப்பயணம் போன்ற இயல்பான எளிய உடற்பயிற்சிகளை தவிர்க்க வாய்ப்பு உள்ளது. அதிகப் போக்குவரத்து நேரங்களில் கட்டண உயர்வுகள் ஏற்படலாம்; சில ஓட்டுநர்கள் மின்னணு பரிவர்த்தனையை நிராகரிக்கலாம். பயணச் செயலிகள் ஓட்டுநரின் வருமானத்தில் பங்கு பிடிப்பதும் ஒரு சிக்கல். தனித்தனியாக பயணம் செய்வதால் வாகன எண்ணிக்கை அதிகரித்து சாலை நெரிசலும் காற்று மாசுபாடும் அதிகரிக்கிறது. பயணிகளின் இருப்பிடத்தை தொடர்ந்து கண்காணிக்கும் இயல்பு, தனியுரிமை குறித்த ஐயத்தையும் எழுப்புகிறது.

மொத்தத்தில் பார்க்கும்போது, வாடகை வாகன செயலிகள் நம் வாழ்வை மிகவும் வசதியாக்குகின்றன. ஆனால் அந்த வசதியின் பின்னால் சில சிக்கல்களும் உள்ளன. நாம் சிந்தித்து, பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்து கொண்டு, சமநிலையாக பயன்படுத்தும் பொழுதே இந்த தொழில்நுட்பம் நமக்கு கசடற பயன் தரும். எனவே, நன்மைகளையும் தீமைகளையும் சமமாகக் கவனித்துப் பயன்படுத்தும் பழக்கம் வளர வேண்டியது அவசியமாகிறது.

  • நவீனா
சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now