ஆப்பிளின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் மேக் மினியில், சிறிய தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாகவும், அதைச் சரிசெய்யவுள்ளதாகவும் ஆப்பிள் நிறுவனம் கூறியிருக்கிறது.

2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், ஆப்பிள் நிறுவனம் தனது மேக்வேர்ல்ட் கண்காட்சியில் தொழில்நுட்ப உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த ஓர் அறிவிப்பை செய்தது. வழக்கமான பெரிய கணினிகளை முற்றிலும் மாற்றியமைக்கும் வகையில், சிறிய அளவிலான ஆனால் சக்திவாய்ந்த ஒரு கணினியை அறிமுகப்படுத்தியது. அதுதான் மேக் மினி, சமீபத்தில்தான் தன்னுடைய 20 ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடியது.
மேக்மினியின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், செல்லினத்திலும் கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. இதன் அறிமுகத்திலிருந்தே “BYODKM” என்ற புத்திசாலித்தனமான முழக்கத்துடன் சந்தைப்படுத்தப்பட்டது, அதாவது “உங்கள் சொந்த காட்சித்திரை, விசைப்பலகை மற்றும் சுட்டியைக் கொண்டு வாருங்கள்” என்பதாகும்.
இதன் சிறிய அளவு மற்றும் எளிமையான வடிவமைப்பானது வீடு, அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் என அனைத்திற்கும் ஏற்றதாக ஆக்குகிறது. பிற நிறுவன கருவிகளைப் பயன்படுத்தும் பயனர்கள் கூட, ஆப்பிளின் பக்கம் வருவதற்கான முக்கிய வேலைகளை மேக்மினி பார்த்துவருகிறது என்றே கூறிவிடலாம். இந்த மேக்மினியில்தான் ஒரு தொழில்நுட்ப குளறுபடி ஏற்பட்டிருக்கிறது. 2023ல் மறுபதிப்பு செய்யப்பட்ட, எம் 2 நுண்சில்லு கொண்ட மேக்மினிகளை இயக்க முடியாத சிக்கல் எழுந்தது. அதிலும் குறிப்பாக ஜூன் 16, 2024 முதல், நவம்பர் 23, 2024 வரை உருவாக்கப்பட்ட மேக்மினிகளில் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஆப்பிள் கூறியிருக்கிறது.
இது தொடர்பாக ஆப்பிள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேக்மினியின் குறைபாட்டை நீக்கித் தரும் சேவையைத் தொடங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த குறைபாடு உள்ளவர்கள் முதலில் வரிசை எண்ணைச் சரிபார்க்க வேண்டும். அதற்கு ஆப்பிள் வெளியிட்டுள்ள வலைப்பதிவில் தனியான பக்கம் வழங்கப்பட்டுள்ளது. வரிசை எண் என்பது `உங்கள் மேக்கைப் பற்றி` என்ற பக்கத்தில் காணப்படும். அதனை நகலிட்டு, ஆப்பிளின் பக்கத்தில் பதிவிட்டால், உங்கள் மேக் மினியில் குளறுபடி இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ளலாம்.
அதன்பிறகு அதனைச் சரி செய்வதுதான் வேலை, அதற்கும் வழிகாட்டுதலை ஆப்பிள் கூறியிருக்கிறது. ஆப்பிளால் அங்கீகரிக்கப்பட்ட சேவை வழங்குநர் அல்லது ஆப்பிளின் விற்பனை கடைகளிலும் இந்த சரிபார்ப்பைச் செய்து கொள்ளலாம். அதற்கு முன்பதிவு செய்யவேண்டும் எனவும் ஆப்பிள் கூறியிருக்கிறது.
- மு. இசக்கிமுத்து
ஆப்பிளின் மேக்மினி பற்றிய அறிவிப்பு
