தள்ளிவிட்டால் அழியும் கூகுள் படம்

கூகுள் படங்கள் செயலியில் டிண்டர் பாணியில் விரலால் தள்ளிவிட்டு புகைப்படங்களை அழிக்கும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கூகுள் படங்கள் செயலியின் பயனாளர்களுக்கு இது ஓர் அற்புதமான செய்திதான். இப்போது கிளவுட் சே​மிப்பகத்திலிருந்து தேவையில்லாத புகைப்படங்களையும், காணொளிகளையும் நீக்குவது எளிதாகிவிட்டது. ​இடது அல்லது வலது புறமாக திரையைத் தள்ளிவிடுவதன் மூலம், அடுத்த பக்கத்தை திறக்கும் அம்சத்தை முதல் முதலாக டிண்டர் செயலி அறிமுகப்படுத்தியது. பயனர்களின் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காகவே இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டது.

டிண்டர் நட்புக்கான செயலி என்பதால், புது நபர்களின் தன்விவரம் காண்பிக்கப்படும். அதனை விரும்பினால் வலது புறமாகத் தள்ளிவிட வேண்டும். பிடிக்கவில்​லை என்றால், நிராகரிக்கும் விதமாக இடதுபுறமாகத் தள்ளிவிட வேண்டும். இது தான் டிண்டர் வழங்கிய செயல்முறை. இது பயனர்களுக்கு மிகவும் பிடித்துப்போகவே, வணிகம், விளையாட்டு, அரட்டை என பல விதமான செயலிகளும் ​இப்படித் தள்ளிவிடும் அம்சத்தை பயன்படுத்த தொடங்கிவிட்டன. இப்போது இதே அம்சத்தை கையில் எடுத்திருக்கிறது கூகுள்.

உண்மையில், இந்த அம்சம் ஆறு மாதங்களுக்கு முன்பே சில பயனாளர்களால் கண்டறியப்பட்டது. அதன் பிறகு இதை பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகமல் இருந்தன. முன்பெல்லாம் ஒவ்வொரு புகைப்படத்தையும் தேர்ந்தெடுத்து அழிக்க வேண்டியிருந்தது. ஆனால் இப்போது புகைப்படத்த்தை இடதுபுறம் தள்ளிவிட்டால் அந்த புகைப்படம் அழிந்துவிடும். மாறாக வலதுபுறம் தள்ளிவிட்டால் அந்தப் புகைப்படம் பாதுகாக்கப்படும்.

மங்கலான, விருப்பமில்லாத, பெரிய அளவிலான கோப்புகள் போன்றவற்றை இந்த முறையில் எளிதாக அழிக்க முடியும். வரிசையில் காத்திருக்கும்போது, ஓய்வு நேரத்தில், சில நிமிட இடைவேளையில் இந்த அம்சம் கட்டாயம் உதவிபுரியும். ஆனால் இது இன்னும் வரையறுக்கப்பட சில பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ரெட்டிட் தள பயனாளர்கள் இந்த அம்சத்தை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த அருமையான அம்சம் விரைவில் அனைத்து பயனாளர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு. இந்த எளிய அம்சம் கூகுள் படங்கள் செயலியின் பயன்பாட்டை இன்னும் சுவையாக்கும்.

இதே போல எண்ணற்ற புதுவித அம்சங்களை கூகுள் படங்கள் செயலியின் பயனர்கள் பார்த்திருக்கிறார்கள். அதேசமயம், கூகுள் அடிப்படை சேமிப்பக திட்டத்தின் மேம்பாடு, காணொளிகளை திரு​த்தும்போது உரைகளை சேர்க்கும் அம்சம் போன்றவற்றை பயனர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

  • மு. இசக்கிமுத்து
சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now