வெட்டு – ஒட்டு

கூகுள் படங்கள் செயலி பயனர்களுக்காக படங்களிலிருந்து ஒட்டுப்படங்களை (Sticker) எளிதாக உருவாக்கும் அம்சம் ஒன்றை வழங்கியுள்ளது.

கூகுள் படங்கள் செயலியில் பல்வேறு புதுப்புது அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு புதிய பதிப்பிலும் என்னென்ன புதிய அம்சங்கள் கிடைக்கும் என பயனர்கள் ஆர்வத்துடன் காத்திருக்க தொடங்கிவிட்டனர். இந்த நிலையில்தான், எந்த வித மூன்றாம் தரப்பு செயலிகளையும் பயன்படுத்தாமல், கூகுள் படங்கள் செயலியிலேயே ஒட்டுப்படங்களை உருவாக்கும் அம்சம் வழங்கப்பட்டுள்ளது.

இதனை உருவாக்கும் செயல்முறையும் அவ்வளவு கடினமானதல்ல, வெறும் ஒரு சில தொடுதல்கள் ​​மூலமாகவே ஒட்டுப்படங்களை உருவாக்கிக்கொள்ள முடியும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தேவையான படத்தில் உள்ள பொருளின் மீதோ, முகத்தின் மீதோ விரலை அழுத்திப் பிடித்திருப்பது மட்டும் போதுமானது.

செயலி தானாகவே பின்னணியிலிருந்து அந்த  பொருளை வெட்டி எடுத்துவிடும். அதன் பிறகு அந்த ஒட்டுப்படத்தை கிளிப்போர்டில் நகலெடுக்கவோ அல்லது பகிரவோ வாய்ப்புகளை வழங்குகிறது. அவற்றை அரட்டைகளுக்கு கருப்பொருள் இல்லாமல் அல்லல் படுபவர்களுக்கு, பகிர்ந்து அரட்டையை மேம்படுத்திக்கொள்ளலாம்.

இவ்வளவு உதவிகளையும் செய்த கூகுள் இங்குதான் ஒரு தடைக்கல்லை வைத்திருக்கிறது. அது என்னவென்றால், தற்போதைக்கு ஐபோன் பயனர்களுக்கு மட்டுமே இந்த அம்சம் கிடைக்கிறது. ஆண்டிராய்டு பதிப்பில் இன்னும் கொண்டுவரப்படவில்லை. இதை பார்த்த உடனே ஆண்டிராய்டு பயனர்கள் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு ஒரு மாற்று யோசனையும், நம்பிக்கையும் இருக்கிறது. முதலில் நம்பிக்கை என்னவென்று பார்த்துவிடுவோம்.

கூகுள் தனது செயலிகளுக்கான புதிய அம்சங்களை ஆண்டிராய்டில் அமல்படுத்துவதற்கு முன் ஐஓஎ​​​ஸ் இல் சோதனை செய்யும் பழக்கம் உண்டு. ஆனால் எந்த ஒரு கூகுளின் அம்சமும் ஐஓஎஸ்க்கு மட்டுமே தனி​த்துவமாக இருப்பது அரிதிலும் அரிது. எனவே ஆண்டிராய்டு பதிப்பின் கூகுள் படங்கள் செயலியிலும் இந்த அம்சம் விரைவில் வரும் வாய்ப்புள்ளது. அதோடு கூகுள் படங்கள் செயலி இந்த புதிய அம்சம் பற்றி ஒரு வலைப்பதிவு பதிவை வெளியிட்டுள்ளது. அதில் “ஆண்டிராய்டு ஆதரவு இன்னும் வெளியிடப்படவில்லை” என்றும், இந்த நிலைமை எப்போது மாறும் என்பது பற்றி கூகுள் பயனர்களுக்குத் தொடர்ந்து தகவல் அளிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

கூகுள் ஆண்டிராய்டு பயனர்களுக்கு இந்த அம்சத்தை வழங்கும் வரை என்ன செய்வது, என்ற கேள்வி எழலாம். அதற்கும் ஒரு மாற்று யோசனை இருக்கிறது. கூகுள் குறுஞ்செய்திகள் செயலியின் போட்டோமோஜி (photomoji) அம்சத்தைப் பயன்படுத்தி இதே போன்ற ஒட்டுப்படங்களை உருவாக்க முடியும். என்னதான் இருந்தாலும் இந்த அம்சம் ஆண்டிராய்டில் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று நம்புவோம்.

  • மு. இசக்கிமுத்து
சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now