கூகுள் ஜியோ கூட்டணி

இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பரவலாக்கும் நோக்கில், கூகுள், ரிலையன்ஸ் நிறுவனங்கள் கூட்டணி அமைத்துள்ளன. இது பற்றிய அறிவிப்பு அக்டோபர் 30, 2025 அன்று கூகுள் வலைப்பக்கத்தில் வெளியாகியுள்ளது. இதன்மூலம், தகுதியுடைய ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் ரூ.35,100 மதிப்புள்ள கூகுள் ஏஐ புரோ (Google AI Pro) திட்டத்தை பதினெட்டு மாதங்கள் முழுமையாக இலவசமாக பயன்படுத்த முடியும்.

google jio

இந்தச் சலுகை முதலில் வரம்பற்ற 5G திட்டப் பயனர்களுக்கு வழங்கப்படும். பின்னர், விரைவில் நாடு முழுவதும் உள்ள அனைத்து தகுதியுடைய ஜியோ பயனர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது ரிலையன்ஸ் ஜியோவின் பயனர் எண்ணிக்கை சுமார் 50.6 கோடி பேராக உள்ளது.

இந்தச் சலுகையின்கீழ், பயனர்கள் கூகுளின் மிகவும் முன்னேறிய ஜெமினி 2.5 புரோ (Gemini 2.5 Pro) செயற்கை நுண்ணறிவு மொழி மாதிரியை பயன்படுத்தலாம். நானோ பனானா, வியோ 3.1 (Veo 3.1) ஆகிய மேம்பட்ட கருவிகள் மூலம் படங்கள், காணொளிகளை உருவாக்குவதற்கான அதிகமான வாய்ப்புகள் கிடைக்கும். கல்வி, ஆய்வுப் பணிகளுக்கு நோட்புக் எல்எம் (NotebookLM) கருவியின் விரிவாக்கப்பட்ட அணுகலும் வழங்கப்படுகிறது. இத்துடன், கூகுள் போட்டோஸ், ஜிமெயில், டிரைவ் ஆகியவற்றில் 2 டெரபைட் சேமிப்பக வசதி, ஆண்டிராய்டு சாதனங்களில் வாட்சாப் சேமிப்பு ஆகியவையும் இலவசமாக கிடைக்கும்.

இந்தக் கூட்டணி, இந்தியாவின் பரந்த மின்னணுத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவு சேவைகளை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகும். ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸின் தலைவர் முகேஷ் அம்பானி, “ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸின் நோக்கம் 145 கோடி இந்தியர்களுக்கும் நுண்ணறிவு சேவைகளை எளிதாக கிடைக்கச் செய்வதாகும். கூகுள் போன்ற நீண்டகால கூட்டாளர்களுடன் இணைந்து, இந்தியாவை செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தும் நாடாக மட்டுமல்லாமல், செயற்கை நுண்ணறிவால் வலுவூட்டப்பட்ட நாடாக மாற்றுவதே எங்கள் இலக்கு” என்று குறிப்பிட்டார்.

கூகுள், ஆல்ஃபபெட் நிறுவனங்களின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை, “ரிலையன்சுடனான நீண்டகால கூட்டு முயற்சி இப்போது செயற்கை நுண்ணறிவு காலகட்டத்துக்குள் நுழைகிறது. இந்தத் திட்டம் நுகர்வோர், வணிகங்கள், இந்தியாவின் உயிரோட்டமான நிரலாளர் சமூகம் ஆகியோரின் கைகளில் கூகுளின் அதிநவீன செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை வழங்கும்” என்று தெரிவித்தார்.

மைஜியோ செயலியில் ‘கிளெய்ம் நவ்’ (Claim Now) பேனரைத் தட்டுவதன்மூலம் பயனர்கள் இந்த சலுகையை செயல்படுத்திக்கொள்ளலாம். ஏற்கெனவே ஜெமினி புரோ கட்டணச் சந்தாதாரர்களாக உள்ளவர்கள் தங்களின் தற்போதைய சந்தா முடிந்தபின் எளிதாக இலவசத் திட்டத்துக்கு மாற முடியும். ஒருமுறை செயல்படுத்தினால் போதும், வரம்பற்ற 5G திட்டத்தில் தொடர்ந்து இருக்கும்வரை பதினெட்டு மாதங்கள் தடையின்றி பயன்படுத்தலாம்.

இதுதவிர, ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ் கூகுள் மேகக்கணிமை உடன் இணைந்து டென்சர் ப்ரோசஸிங் யூனிட்ஸ் (TPUs) என்ற மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு வன்பொருள் முடுக்கிகளுக்கான அணுகலை விரிவுபடுத்தும். இது நிறுவனங்கள் பெரிய, சிக்கலான செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை பயிற்றுவிக்கவும், பயன்படுத்தவும் உதவும். மேலும், ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ் கூகுள் மேகக்கணிமையின் ஜெமினி எண்டர்பிரைஸ் தளத்தின் சந்தைப்படுத்தல் கூட்டாளியாகவும் செயல்படும்.

இந்தக் கூட்டணி, இந்தியாவை உலகளாவிய செயற்கை நுண்ணறிவு மையமாக மாற்றும் திசையில் முக்கியமான நகர்வாகக் கருதப்படுகிறது.

  • செல்லினம் குழு.
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now