அசையாத பொத்தானும் அசையும்

ஐபோன் திறன்பேசிகளில் நீண்ட காலமாகப் பேசப்பட்ட திட நிலை பொத்தான்கள் (solid state button) விரைவில் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஆப்பிளின் அதிகாரப்பூர்வ அறிவிப்பல்ல. வலைத்தளம் ஒன்றில் வெளியான செய்தியின்படி ஆப்பிள் தனது திட நிலை பொத்தான் அமைப்பின் செயல்பாட்டு சரிபார்ப்பை முடித்துவிட்டதாகவும் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

திட நிலை பொத்தான் என்பது உண்மையில் பொத்தானே அல்ல. இது தட்டையான பரப்பு மட்டும்தான், ஆனால் அழுத்தும்போது ஒரு வித அதிர்வு மூலம் (haptic feedback) அழுத்திய உணர்வை கொடுக்கிறது. திறன்பேசியின் உறையுடன் இணைந்து அமைந்திருப்பதால், சிறிய இடுக்குகள் கிடையாது. அதனால் தூசி, அழுக்கு போன்றவை பொத்தானுக்கு இடையில் சேருவதற்கு வழியில்லை.

திட நிலை பொத்தான்களைப் பயன்படுத்துவது திறன்பேசிகளின் ஆயுளை கணிசமாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. பாரம்பரிய பொத்தான்களில் உள்ளது போல் இயந்திர பாகங்கள் இல்லாததால், அவை தேய்மானம் அடைவதில்லை. அதேபோல திறன்பேசி தவறி விழுந்தால் பக்கவாட்டு பொத்தான்கள் உடையும் வாய்ப்பும் இனி குறையும்.

ஆப்பிள் பல ஆண்டுகளாக திட நிலை பொத்தான்களில் வேலை செய்வதாக வதந்திகள் பரவிவந்தன. ஐபோன் 15 ப்ரோ திறன்பேசியிலேயே திட நிலை பொத்தான் கிடைக்கும் என்றுகூட கூறப்பட்டது. ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை. திட நிலை பொத்தான்கள் செயல்பட அடிப்படை மின்சாரமும் மென்பொருள் ஆதரவும் தேவை. திறன்பேசி முற்றிலும் செயலிழந்தால், இந்த பொத்தான்களின் haptic feedback செயல்படாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒருவேளை திட நிலை பொத்தான் அடுத்த சில ஆண்டுகளில் ஆப்பிள் திறன்பேசிகளில் கிடைத்தால், அது புது வரலாற்றை உருவாக்கும். இருப்பினும் புதிய மாற்றத்தை ஆப்பிள் எப்போது வெளியிடும் என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகே தெரியவரும்.

வீபோ லீக்கர் செட்சுனா டிஜிட்டல் (Weibo leaker Setsuna Digital) வெளியிட்டுள்ள இந்தத் தகவலின் உண்மைத்தன்மை சர்சைக்குரியதே. பல நேரங்களில் இவர்கள் செய்திகள் பொய்ப்பதும் சில நேரங்களில் நடப்பதும் உண்டு. எனினும் திட நிலை பொத்தான்கள் மீது வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் ஆர்வத்தையே இத்தகைய செய்திகள் காட்டுகின்றன.

  • மு. இசக்கிமுத்து
சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now