அமெரிக்கப் பூர்வகுடிகள் மாதம்

அமெரிக்கப் பூர்வகுடிகளுக்கான பாரம்பரிய மாதத்தை வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறது கூகுள்.

ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் தேசிய அமெரிக்கப்பூர்வகுடிகள் மாதமாக கொண்டாடப்படுகிறது. இது அமெரிக்க, அலாஸ்கா பழங்குடி சமூகங்களின் மரபுகள், மொழிகள், கதைகளைக் கொண்டாடுவதற்கும், அவர்களின் வரலாற்றை இன்றைய தலைமுறைக்கு கொண்டுசெல்லவும் பெருமளவில் உதவுகிறது.

1990ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ் நவம்பர் மாதத்தை “தேசிய அமெரிக்கப்பூர்வகுடிகள் மாதமாக” அறிவித்தார். அதன்பின் ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்கா முழுவதும் இம்மாதம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

அமெரிக்கப்பூர்வகுடிகள் யார்?

அமெரிக்கப்பூர்வகுடிகள் (Native Americans) என்போர் அமெரிக்க கண்டத்தின் பழங்குடி மக்கள். ஐரோப்பியர்கள் அமெரிக்காவிற்கு வருவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்த நிலப்பரப்பில் வாழ்ந்து வந்தவர்கள். இவர்களை “இந்தியன்” என்று தவறாக அழைக்கப்பட்டதற்குக் காரணம், கொலம்பஸ் இந்தியாவை அடைந்ததாக நினைத்ததே ஆகும். செவ்விந்தியர் (Red Indians) என்று அடையாளப்படுத்தப்பட்டவர்கள், இன்று Native Americans, American Indians, Indigenous peoples என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார்கள்.

2024ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 574 பூர்வீக அமெரிக்கப் பழங்குடி இனக்குழுக்கள் உள்ளன. இதில் உள்ள ஒவ்வோர் இனமும் தனித்துவமான கலாசாரம், மொழி, பாரம்பரியங்களைக் கொண்டவை. செரோகி, நவாஜோ, சியோக்ஸ், சிக்காசா, அப்பாச்சி போன்ற பல்வேறு இனக்குழுக்கள் உள்ளன.

இந்த மாதத்தில் கூகுள் பழங்குடி அமெரிக்கர்களின் கதைகள், கலையை மக்களுக்கு காண்பிக்க புதிய வழிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

பூர்வீக அமெரிக்கர்களின் பழமை வாய்ந்த புல்லாங்குழல்களை கௌரவிக்கும் வகையில் டூடுல் (Doodle) ஒன்றை கூகுள் வெளியிட்டுள்ளது. சிக்காசா இனத்தைச் சேர்ந்த கலைஞர் மேடலின் குட்நைட் வரைந்த இந்த டூடுல் பூர்வீக அமெரிக்க புல்லாங்குழல்களின் வளமான மரபையும் தொடர்ச்சியான இசைத் திறனையும் கொண்டாடுகிறது.

கூகுள் பிளே ஸ்டோரில், அமெரிக்கப் பூர்வகுடிகள் பாரம்பரிய மாதத்திற்காக சிறப்பாக உருவாக்கப்பட்ட விளையாட்டுகள் உள்ளன.

யூட்யூப் செயலியில் ஷீனா நோவா, மரிகா சில்கா, ஈகிள் பிளாக்பேர்ட், சீஃப்ஸ்வீட்ஸ்யூனிவர்ஸ் போன்ற படைப்பாளிகளின் சமூக தொகுப்பாக்கம், அனுபவங்கள், வலைப்பதிவுக் கட்டுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

கூகுள் வரைபடங்களில் பூர்வீக மக்களுக்குச் சொந்தமான பொருள்களையும், அவர்கள் வாழும் பகுதிகளையும் முன்னிலைப்படுத்தும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டுவருகிறது.

இந்த கொண்டாட்டங்கள் பூர்வீக அமெரிக்க மக்களின் பங்களிப்புகளை அங்கீகரிப்பதோடு, அவர்களின் கலாசாரம், மொழி, பாரம்பரியங்களைப் பாதுகாக்கவும் இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தவும் உதவுகின்றன.

  • இசக்கிமுத்து
சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now