புத்தாண்டு வாழ்த்துகள்!

தமிழ்க் கணிமையில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளைக் கண்டு, முன்னேற்றங்களுக்கான எதிர்பார்ப்புகளுடன் 2025ஆம் ஆண்டு நிறைவுக்கு வருகிறது.

முரசு அஞ்சல்: புதிய வரலாற்றின் தொடக்கம்.

நாற்பது ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வரும் முரசு அஞ்சல், இந்த ஆண்டு முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டு பெரிய அளவில் வெளியிடப்பட்டது. இது வழக்கமாக நடக்கும் மேம்பாடு மட்டும் அல்ல – கணினியில் தமிழ்ப் பயன்பாட்டை உலகத் தரத்திற்கு உயர்த்தும் ஒரு மறு உருவாக்கத்திட்டம்! முரசு அஞ்சல் செயலியின் ஒவ்வொரு பகுதியும் சில ஆண்டுகளாகவே திட்டமிட்டு செம்மைப்படுத்தி வருகிறோம். இவற்றோடு தமிழ் உள்ளீட்டு அனுபவத்தை முற்றிலும் புதுமையாக்க பல புதிய கூறுகளும் சேர்த்துள்ளோம்!

புதிய முரசு அஞ்சல் செயலியின் வெளியீட்டு நிகழ்ச்சி கோலாலம்பூர், சிங்கப்பூர், சென்னை என மூன்று நாடுகளில் வலம் வந்தது. ஒரு தமிழ் மென்பொருளுக்கு இவ்வளவு பெரிய அளவில் இதுவரை வெளியீடு நடந்திருக்க வாய்ப்பில்லை. முரசு அஞ்சல் செயலியின் உலகலாவிய பயன்பாட்டை இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பன்னாட்டு பயனர்கள் மேலும் நிலைநாட்டினர். 

உரு: தமிழ்க் கணிமை வரலாற்றின் பதிவு

இவ்வாண்டு உரு எனும் நூலின் வெளியீட்டையும் கண்டது. தமிழ்க் கணிமையின் தொடக்கத்தையும் தமிழ் எழுத்துருவாக்க வளர்ச்சியையும் பதிவு செய்யும் இந்நூல் பலரின் வரவேற்பைப் பெற்றது – தொடர்ந்து பெற்றும் வருகிறது. எழுத்தாளர் கோகிலா எழுதி, காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட இந்நூல், தொழில்நுட்ப உலகில் தமிழ் எதிர்நோக்கிய சவால்களையும் அவற்றில் பெற்ற வெற்றிகளையும், முத்து நெடுமாறனின் வாழ்க்கை வரலாற்றின் வழியாகப் பதிவு செய்கிறது.

2026 : செல்லினத்தில் கவனம்

2026இல் புத்தாக்கத்திற்கான முன்னெடுப்புகள் செல்லினத்தை மையமாகக்கொண்டு வருகின்றன. முரசு அஞ்சல் செயலியின் மறுவடிவமைப்புக்கு அடிப்படையாக அமைந்த கோட்பாடுகளையும் கட்டமைப்புகளையும் செல்லினத்திற்குக் கொண்டுவரச் சில காலமாகவே திட்டமிட்டுச் செயல்படுத்த முயன்று வருகிறோம்.

முரசு அஞ்சல் கணினி பயன்பாட்டில் தமிழை எளிமையாக்குவதைப்போல செல்லினம் கையடக்கக் கருவிகளில் தன் வேலையைப் பல ஆண்டுகளாகவே செய்து வருகிறது. கணினியிலும் கையடக்கக் கருவிகளிலும் தமிழின் உள்ளீட்டு அனுபவங்கள் வெவ்வேறானவை. அவற்றை ஆழமாக ஆராய்ந்து அந்த அனுபவத்தை மேலும் எளிமையாக்குவதும் இனிமையாக்குவதுமே எங்கள் இலக்கு. வரும் ஆண்டில் இவற்றைப் படிப்படியாக உங்களுக்குக் கொண்டுவர பேராவலோடு ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம்.

உலகெங்கும் உள்ள செல்லினப் பயனர்கள் அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! 2026ஆம் ஆண்டு முழுவதும் தொழிநுட்ப உலகில் தமிழின் பயன்பாட்டை எளிமையாக்குவோம் – இனிமையாக்குவோம்!

2026 புத்தாண்டைக் கொண்டாடும் உலகளாவிய செல்லினம் பயனர்கள் அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்! மலரும் புதிய ஆண்டு உங்கள் அகங்களிலும் இல்லங்களிலும் புத்தெழுச்சியையும் பெருமகிழ்ச்சியையும் சேர்க்கட்டும்! 

  • செல்லினம் – முரசு அஞ்சல் குழுவினர்
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now