வெறும் ஒரு நீல நிற செவ்வகம். அதில் வெள்ளை நிற சிறிய எழுத்துகள். இவ்வளவுதான் முகநூலின் முத்திரை. ஆனால் இந்த எளிமையான வடிவமைப்பு இரண்டு பில்லியனுக்கும் அதிகமான மக்களை இணைக்கும் ஒரு சமூக ஊடக பேரரசின் அடையாளமானது. உலகில் இன்று எத்தனையோ நிறுவனங்கள் தங்கள் முத்திரைகளை மாற்றி மாற்றி வடிவமைக்கின்றன. ஆனால் முகநூல் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக தன் முத்திரையை ஏறக்குறைய அப்படியே வைத்திருக்கிறது. ஏன்? எப்படி? அந்த கதையை இங்கே பார்க்கலாம்.

ஹார்வர்டு விடுதியில் தொடங்கிய பயணம்
முகநூல் பிறந்தது ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஒரு விடுதி அறையில். மார்க் ஜுக்கர்பெர்க் என்ற இளம் மாணவருக்கு இரண்டாம் ஆண்டு படிக்கும்போது இந்த யோசனை தோன்றியது. ‘ஃபேஸ்மேஷ்’ என்ற பெயரில் தனது பயணத்தை தொடங்கினார். ஹார்வர்டு மாணவர்களின் புகைப்படங்களை அருகருகே வைத்து, யார் அழகானவர் என்று மக்கள் வாக்களிக்கும் தளம் அது. ஆனால் ஹார்வர்டு இதை விரும்பவில்லை. தளத்தை உடனே நிறுத்தியது. ஜுக்கர்பெர்க்கை வெளியேற்றலாம் என்று கூட யோசித்தது.
இதில் இருந்து கற்றுக்கொண்ட ஜுக்கர்பெர்க், ஹார்வர்டு மாணவர்களுக்கான ஆன்லைன் தொகுப்பகத்தை உருவாக்கினார். மாணவர்கள் தங்கள் வகுப்புத் தோழர்களை தேடிக்கண்டுபிடிக்க உதவியது. இதற்கு ‘தி ஃபேஸ்புக்’ என்று பெயரிட்டார். தொடங்கிய ஆறு நாள்களிலேயே மீண்டும் சர்ச்சை வந்தது. மூன்று சக மாணவர்கள் அவர் தங்கள் யோசனையை திருடிவிட்டதாக குற்றம்சாட்டினர். ஆனால் இதையெல்லாம் மீறி ‘தி ஃபேஸ்புக்’ வளர்ந்துகொண்டே இருந்தது. ஹார்வர்டில் பாதி மாணவர்கள் இதில் சேர்ந்தனர். பின்னர் யேல், ஸ்டான்ஃபோர்ட், கொலம்பியா போன்ற பல்கலைக்கழகங்களுக்கும் விரிவானது. 2004-ல் நிறுவனமானது. 2005-ல் ‘தி ஃபேஸ்புக்’ என்பது வெறும் ‘ஃபேஸ்புக்’ ஆனது. அதே ஆண்டில் facebook.com இணைய முகவரியை 2 லட்சம் டாலருக்கு வாங்கினர்.
முத்திரையை வடிவமைத்தவர் யார்?
பேஸ்புக்கின் நிறுவனத்தின் முதல் தலைவராக இருந்த ஷான் பார்க்கர், மைக் பஸார்ட் என்ற வடிவமைப்பாளரை அணுகினார். அவர் குழுவைச் சேர்ந்த எரிக் ஓல்சன் க்ளாவிகா எழுத்துருவை உருவாக்கினார். அந்த எழுத்துருவை முகநூலுக்கு ஏற்ப மாற்றியமைத்தவர் ஜோ க்ரால். சிறிய எழுத்துகளைப் பயன்படுத்தியது ஒரு திட்டமிட்ட முடிவு. முகநூல் கட்டுப்பாடுகளற்ற, நட்புரீதியான தளம். குடும்பம், நண்பர்களுடன் எளிமையாக தொடர்பு கொள்வதற்கானது. சிறிய எழுத்துகள் இந்த உணர்வை நன்றாக காட்டுகின்றன. இதற்கு பின்னர் இன்றுவரை பெரிய மாற்றங்கள் எதுவும் தேவைப்படவில்லை. இதுதான் ஒரு சிறந்த வடிவமைப்பின் அடையாளம்.
நிறப் பார்வை வேறுபாடு கொடுத்த நீல நிறம்
முகநூலின் முத்திரையில் மிக முக்கியமானது அதன் நீல நிறம். இந்த நிறத்தை தேர்வு செய்தவர் ஜுக்கர்பெர்க்கே. ஆனால் ஏன் நீலம்? இதற்கு ஒரு களிநயமான காரணம் உண்டு. ஜுக்கர்பெர்க்கிற்கு ஒரு வகை நிறப் பார்வை வேறுபாடு உள்ளது. சிவப்பு, பச்சை போன்ற வண்ணங்களை அவரால் தெளிவாக பார்க்க முடியாது. ஆனால் நீல நிறத்தை தெளிவாக பார்க்க முடியும். அதனால்தான் நீலம் தேர்வு செய்யப்பட்டது என்பது வடிவமைப்பாளரின் கருத்து.
வண்ணங்கள் ஒரு நிறுவனத்தின் அடையாளத்தில் பெரிய பங்கு வகிக்கின்றன. வண்ணத்தை பொறுத்தே வாங்கலாம் எனத் தீர்மானிக்கும் முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு நீலம் மிகவும் பொருத்தமானது. அது நேர்த்தி, விசாலம், தொழில்நுட்பம் ஆகியவற்றை குறிக்கிறது. முகநூல் முதல் லிங்க்டின் வரை உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த நிறத்தை பயன்படுத்துகின்றன. #4267B2 வண்ணக்குறியீடு (official hex code) கொண்ட முகநூலின் நீலத்திற்கு வடிவமைப்பு உலகில் செல்டிக் ப்ளூ என்று பெயர். ஆனாலும் பரவலாக பேஸ்புக் புளூ என்றே அறியப்படுகிறது.
முத்திரையின் பரிணாம வளர்ச்சி
பேஸ்மேஷ் (2003)
எல்லாம் இங்குதான் தொடங்கியது. ஒரு அடர் சிவப்பு செவ்வகம். அதில் வெள்ளை நிற பெரிய எழுத்துகளில் பேஸ்மாஷ் (FACEMASH). பார்ப்பதற்கு எளிமையானது. ஆனால் இதுதான் சமூக ஊடக உலகில் பற்றிக்கொண்ட முதல் தீப்பொறி.
தி பேஸ்புக் (2004) – நீலத்தின் வருகை
பேஸ்மேஷின் சிவப்பு மறைந்தபின் நீலம் வந்தது. அடர் நீல செவ்வகத்தில் சிறிய வெள்ளை எழுத்துகளில் தி பேஸ்புக் (thefacebook) என்று ஒரே சொல்லாக எழுதப்பட்டிருந்தது. படங்கள் இல்லை. அலங்காரங்கள் இல்லை. நிறுவனத்தின் பெயரே மையம். இந்த எளிமையான நீல செவ்வகம் ஒரு நாள் உலகின் மிகப் பெரிய சமூக ஊடகத்தின் முகமாக மாறும் என இந்த கட்டத்தில் யாரும் யோசித்திருக்க மாட்டார்கள்.
பேஸ்புக் (2005)
facebook.com இணைய முகவரியை வாங்கியதும் ஒரு முக்கியமான முடிவு எடுக்கப்பட்டது. ‘தி’ என்பதை நீக்கிவிட்டார்கள். வெறும் ‘பேஸ்புக்’ மட்டுமே. ஒரே ஒரு சொல் போனது. ஆனால் அந்த மாற்றம் முத்திரையை முற்றிலும் மாற்றியது. எழுத்துகள் பெரிதாயின. வெள்ளை நிறம் தெளிவாக மின்னியது. செவ்வகம் முழுவதும் எழுத்துகள் பரவின. ஒரு கல்லூரி திட்டம் முழுமையான வணிக அடையாளமாக உருமாறிய தருணம் அது.
நுட்பமான மாற்றங்கள் (2015)
பத்து ஆண்டுகள் கடந்தன. முத்திரை மாறியது. ஆனால் யாரும் கவனிக்கவில்லை. அதுதான் இந்த மாற்றத்தின் சிறப்பு. ‘a’ எழுத்து மாறியது. ‘b’ எழுத்து மாறியது. எழுத்துகளுக்கு இடையே இடைவெளி கொஞ்சம் அதிகமானது. பார்வையாளர்கள் வித்தியாசத்தை உணர்ந்தார்கள். ஆனால் என்ன மாறியது என்று சொல்ல முடியவில்லை. மாற்றத்தையே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மாற்றுவது சிறந்த ஒன்றாக பார்க்கப்பட்டது.
திறன்பேசி புரட்சி (2019)
2019 காலத்தில் கணினி திரைகளில் பார்த்தவர்கள் கைப்பேசித் திரைகளில் பார்க்கத் தொடங்கியிருந்தார்கள். ஒரே முத்திரை இரண்டு திரைகளிலும் ஒரே மாதிரி தெரிய வேண்டும். சிறிய திரைகளில் முத்திரை மங்கலாக தெரிகிறதா? தனித்து நிற்கிறதா? இந்த கேள்விகளுக்கு பதில் தேடினார்கள். முத்திரையின் நீலத்தை இன்னும் பிரகாசமாக்கினர். எந்தக் கருவியிலும் அளவை மாற்றக்கூடியதாக செய்தனர். சிறிய ‘f’ படவுருவும் சதுர வடிவத்தில் இருந்து வட்ட வடிவமானது. ‘f’ எழுத்து கீழ் வலது பக்கமாக நகர்ந்தது. சிறிய மாற்றங்களாக இருந்தாலும் திறன்பேசி யுகத்திற்கு ஏற்ற திருத்தமாக இருந்தது.
மெட்டா யுகம் (2021)
2021-ல் முகநூலின் வரலாற்றில் யாரும் எதிர்பார்க்காத ஒரு மாற்றம் நடந்தது. பேஸ்புக் என்ற பெயர் போனது. மெட்டா என்று ஆனது. ஆனால் இது பெயர் மாற்றம் மட்டுமாக இல்லாமல் ஒரு புதிய கனவின் அறிவிப்பாக இருந்தது. மெட்டாவர்ஸ் என்ற மெய்நிகர் உலகை உருவாக்குவதை பிரதிபலிக்கும் வகையில் புதிய முத்திரை வந்தது. எழுத்துகள் ஏதும் இல்லாமல் ஒரு எல்லையற்ற வளையம் உருவானது. இந்த முத்திரையில் பேஸ்புக் நீலத்துடன் அஸூர், கன்மெட்டல் என்ற இரண்டு கூடுதல் நீல நிறங்களும் சேர்ந்தன.
மெட்டா எனும் ஒரே குடைக்குள் இணைந்தாலும் முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்சாப், மெசஞ்சர் போன்ற அனைத்தும் தங்கள் சொந்த முத்திரைகளை வைத்திருக்கின்றன. ஏனென்றால் மக்கள் அந்த முத்திரைகளை நேசிக்கிறார்கள். முத்திரை மூலமாகவே அவற்றை அடையாளம் காண்கிறார்கள். அவற்றை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல.
எளிமையின் வெற்றி
இருபது ஆண்டுகளாக முகநூல் தன் முத்திரையை கிட்டத்தட்ட மாற்றவில்லை. வெறும் ஒரு வார்த்தை, ஒரு நிறம், ஒரு வடிவத்துடன் இன்றுவரை பயணம் செய்கிறது. எளிமையான வடிவமைப்பு, தெளிவான நிறம், படிக்க எளிதான எழுத்துரு என்ற மூன்று காரணிகள் காலத்தை வென்று இந்த முத்திரை நிலைபெற உதவியுள்ளன.
- மு. இசக்கிமுத்து
