திரையில் பிறந்த மொழிகள் – 5

மொழியிலிருந்து பிறந்த உலகம்!

ஒரு கதை எழுத வேண்டும் என்று தொடங்கி ஓர் உலகையே படைத்தவர்கள் வரலாற்றில் சொற்பமே. ஆனால் ஜே.ஆர்.ஆர். டோல்கின் அதிலும் மாறுபட்டவர். அவர் முதலில் ஒரு மொழியை உருவாக்கினார்; பின்னர் அந்த மொழி வாழ்வதற்கோர் உலகைத் தேடினார்; கடைசியாக அந்த உலகை நிரப்புவதற்காக கதைகளை எழுதினார். மொழி முதலில் பிறந்தது; கதைகள் அதன் பின்னே வந்தன. இதுவே அவரது படைப்புலகின் அடிப்படை ரகசியம்.

“தி லார்ட் ஆஃப் த ரிங்ஸ் (The Lord of the Rings)”, “தி ஹாபிட்(The Hobbit)”, “தி சில்மரில்லியன் (The Silmarillion)” போன்ற புகழ்பெற்ற படைப்புகளின் பின்னாலும் இதே சுவாரஸ்யமான உண்மை மறைந்திருக்கிறது. டோல்கீன் உருவாக்கிய “குவென்யா”, “சிந்தரின்” போன்ற எல்விஷ் மொழிகளுக்கு உயிர் கொடுக்க ஓர் உலகம் தேவைப்பட்டது. அந்த உலகத்தை மையமாக கொண்டு ஒரு கதை உருவானது.

இளம் வயதிலிருந்தே ஆங்கிலம், வேல்ஷ், பின்னிஷ் போன்ற மொழிகளின் இலக்கணத்தையும், அவற்றின் பின்னணியில் மறைந்திருக்கும் பண்பாட்டையும் ஆர்வத்துடன் ஆராய்ந்து படித்தவர் அவர். ஒரு மொழி வெறும் தொடர்பு கருவி மட்டுமல்ல; அது இனத்தின் வரலாறு, கனவு, துயரம், நினைவுகள் அனைத்தையும் சுமக்கும் உயிர்ப்பான அமைப்பு என்பதை டோல்கீன் ஆழமாக உணர்ந்திருந்தார். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய காலத்திலும் இந்த மொழிக்காதல் ஒரு நாளும் குறையவில்லை.

மொழியியல் அவருக்குப் பொழுதுபோக்கான ஆய்வுத் துறையாக இருந்தது; அந்த ஆய்வுக்கு மேடையாகவே மிடில்-எர்த் என்ற கற்பனை உலகம், மொழியில் இருந்து பிறந்த உலகம் உருவானது. ஒரு மொழி உருவாகும்போது அதற்கான உலகமும் உருவாகிறது; அந்த உலகை நிரப்ப கதைகளும் பிறக்கின்றன. இந்த அணுகுமுறையே டோல்கீனை மற்ற எழுத்தாளர்களிலிருந்து முற்றிலும் வேறுபடுத்துகிறது.

1950களில் நாவலாக வெளியான இந்தக் கதையை இயக்குநர் பீட்டர் ஜாக்சன், 2001–2003 ஆண்டுகளில் திரைப்படங்களாக (மூன்று பாகங்களில்) உலகுக்கு அளித்தார். பதினேழு அகாடமி விருதுகளை வென்ற அந்த திரைப்படங்களில் எல்ஃப் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் சிந்தரின் மொழியிலேயே பேசுகின்றனர்; சில பாடல்கள், விழாக்கால உரைகளில் மட்டும் குவென்யா மொழியும் பயன்படுத்தப்படுகிறது. ஹோவர்டு ஷோர் இசையமைத்த பின்னணி இசையுடன், டோல்கீன் எழுதிய “நமாரியே” என்ற குவென்யா பாடல் ஒலிக்கும் போது, நூற்றாண்டுகளின் இழப்பையும் அழகையும் ஒரே நேரத்தில் உணர முடிகிறது. அது வெறும் பின்னணி இசை அல்ல; ஓர் இனம் விடைப்பெற்றுச் செல்லும் உணர்வைத் தருகிறது.

இந்த மொழிகளை திரைக்கு உகந்தவாறு வடிவமைக்க முக்கியப் பங்கு வகித்தவர் மொழியியல் அறிஞர் டேவிட் சலோ. 1973ல் டோல்கின் மறைந்துவிட்டிருந்தாலும், அவர் விட்டுச் சென்ற ஆயிரக்கணக்கான மொழிக் குறிப்புகள், சொற்களஞ்சியங்கள், இலக்கண வரைபுகளை சாலோ ஆராய்ந்து, அதே விதிகளைப் பின்பற்றி திரைப்படங்களுக்குத் தேவையான புதிய சொற்களையும் உரையாடல்களையும் உருவாக்கினார். ஒரு தலைசிறந்த கட்டடக் கலைஞர் வடிவமைத்த வீட்டில், அதே பாணியை குலைக்காமல் புதிய அறைகளை சேர்ப்பதைப் போல, மொழியின் அடையாளம் மாறாமல், ஆனால் உலகம் விரிவடையும் வகையில் அதைச் செய்தார்.

குவென்யா என்பது மிடில் எர்த்தின் “லத்தீன்”. அதாவது, மன்னர்களும் அறிஞர்களும் பயன்படுத்திய பண்டைய, சடங்கு மொழி. பின்னிஷ் மொழியின் இசை போன்ற ஓட்டம், நீண்ட உயிர் எழுத்துகள், மென்மையான தாளம், இவற்றிலிருந்து குவென்யா உருவானது. சிந்தரின் என்பது நாளும் பேசும் வழக்கு மொழி. வேல்ஷ் மொழியின் மென்மையான ஒலி மாற்றங்களிலிருந்தும், அதன் துயரமூட்டும் அழகிலிருந்தும் உருவானது. குவென்யா கடந்த காலத்தின் மொழி; சிந்தரின் இன்றைய வாழ்வின் மொழி. இரண்டும் சேர்ந்தே ஓர் இனத்தின் முழு உணர்வு வெளிப்பாட்டை சாத்தியமாக்குகின்றன.

குவென்யா மொழியின் ஒலியியல் அமைப்பு, ஒழுங்கும் அழகும் கொண்டதாகும். இதில் மெய்யெழுத்துகளும் உயிரெழுத்துகளும் தெளிவான விதிகளைப் பின்பற்றுகின்றன. உயிரெழுத்துகள் ஐந்தே இருந்தாலும் (அ, எ, இ, ஒ, உ), அவை குறில், நெடில் என்ற நீள வேறுபாட்டில் மாறுவதால் பொருள் வேறுபாடுகள் உருவாகின்றன. மேலும், இரட்டையுயிர் ஒலிகளும் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு சொல்லை உச்சரிக்கும் போது எந்த அசையில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்கும் விதிகள் உள்ளன; பொதுவாக சொல்லின் இரண்டாவது அல்லது மூன்றாவது அசையில் அந்த அழுத்தம் வரும்.

இலக்கண அமைப்பில் பெயர்ச்சொற்கள் மிகவும் முக்கியமானவை. குவென்யாவில் ஒரே ஒரு குறிப்புச் சொல் மட்டுமே உள்ளது; அது “அந்த (the)” என்ற பொருளைக் கொடுக்கும், “i”. “ஒரு/ஓர்” [a/an] போன்ற தனித்த குறிப்புச் சொற்கள் இதில் கிடையாது. பெயர்ச்சொற்கள் பல வேற்றுமை நிலைகளில் மாறுகின்றன. மொத்தம் பத்து வேற்றுமைகள் உள்ளன. ஒவ்வொரு வேற்றுமையும் தனித்தனியான பொருளை வழங்குகிறது. எடுத்துக்காட்டாக, “க்கு”, “இருந்து”, “இல்”, “உடன்” போன்ற பொருள்படும் சொற்கள் தனியே சொல்லப்படாமல், சொற்களின் இறுதியில் சேரும் தொடரெழுத்துகள் மூலம் வெளிப்படுகின்றன.

இந்த மொழியின் இன்னொரு சிறப்பு அதன் எண்ணியல் அமைப்பு. இதில் ஒருமை மட்டும் இல்லாமல், இருமை (இரண்டு), பன்மை (பல), பகுதி பன்மை (சில) ஆகிய நான்கு வகைகள் உள்ளன. இதனால் ஒரு பொருளின் எண்ணிக்கையை துல்லியமாகச் சொல்ல முடிகிறது.

குவென்யா மொழியில் வினைச்சொற்கள் மிகவும் முக்கியமானவை; அவை பொதுவாக அடிப்படை வினைச்சொற்களாகவும் (mat- சாப்பிடுதல், tir- பார்த்தல்) உருவாக்கப்பட்ட வினைச்சொற்களாகவும் (tulta- அழைத்தல், harya- – வைத்திருத்தல்) இரு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இந்த வினைச்சொற்கள் காலத்தைப் பொறுத்து பல வடிவங்களில் மாறுகின்றன; எடுத்துக்காட்டாக டீர் (tir-பார்த்தல்) → நிகழ்காலம் டைர் (tirë-பார்க்கிறான்), இறந்தகாலம் டீர்னே (tirnë-பார்த்தான்), எதிர்காலம் டிருவா (tiruva- பார்ப்பான்) என மாறுகிறது, மேலும் நிறைவு நிலையில் ஐடிரியே (itírië-பார்த்துவிட்டான்) போன்ற வடிவமும் கிடைக்கிறது.

குவென்யா மொழியில் வினைச்சொற்களிலேயே எழுவாயை (subject) குறிக்கும் பின்னொட்டுகள் சேர்க்கப்படுகின்றன. கரண்யா (cáranyë) என்பது “நான் செய்கிறேன்” என்று பொருள்; இங்கே, கார் (car) என்பது செய் என்பதைக் குறிக்கும், நியே (-nyë) என்பது “நான்” என்பதை குறிக்கும். அதனால் எழுவாய்யை தனியாக சொல்லாமல், ஒரே வினைச்சொல் முழு வாக்கியத்தின் பொருளை வெளிப்படுத்த முடியும். இதனால் வினைச்சொற்கள் சுருக்கமாகவும் வலிமையாகவும் தகவலை தெரிவிக்கும் திறன் கொண்டதாகவும் இருக்கும்.

குவென்யா மொழியில் இருமை வடிவம் என்பது இரண்டு குறிப்பிட்ட பொருள்கள் அல்லது நபர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு தனிப்பட்ட அமைப்பாகும். இந்த இருமை வடிவத்தில் இரண்டு முக்கியமான வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்று “உ (u)” வடிவம் ஆகும். இது இயல்பாகவே இணையாக இருக்கும் பொருள்களுக்கு பயன்படுத்தப்படுகிறது; எளிதாகச் சொன்னால், இயற்கையாக இணைந்திருக்கும் இரண்டையும் குறிக்கிறது. எடுத்துக்காட்டு, “பே (pé)” என்பது உதடு என்று பொருள் தரும்; அதன் இருமை வடிவமான “பியு (peu)” என்பது ஒருவரின் இரண்டு உதடுகளை குறிக்கும். அதேபோல் “அல்டா(alda)” (மரம்) என்ற சொல் “அல்டு (Aldu)” ஆக மாறும்போது, அது இரண்டு குறிப்பிட்ட மரங்களை, குறிப்பாக வாலினோரின் இரு மரங்களைச் சுட்டிக்காட்டுகிறது. ஒரு சொல் உயிரெழுத்தில் முடிந்தால், “உ” சேரும் போது அந்த இறுதி உயிர் நீக்கப்படும் என்பது இதிலுள்ள ஒரு விதியாகும்.

இரண்டாவது வகை “த் (t)” வடிவம் ஆகும். இது ஆரம்பத்தில் ஒன்றுக்கொன்று இயல்பாகச் சேராத இரண்டு பொருள்களை குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் காலப்போக்கில் “உ” வடிவமும் “த்” வடிவமும் ஒரேமாதிரி பயன்பாட்டை அடைந்துவிட்டன; அதாவது இரண்டிற்கும் இருந்த வேறுபாடு மங்கிவிட்டது. இப்போது எந்த வடிவத்தை பயன்படுத்துவது என்பது பெரும்பாலும் ஒலி இனிமையைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. ஒரு சொல்லில் ஏற்கனவே “த்” அல்லது அதற்கு ஒத்த ஒலி இருந்தால், “உ” வடிவத்தை பயன்படுத்துவது சிறப்பாகக் கேட்கும் என்பதால் அதற்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இவ்வாறு இருமை வடிவத்தின் பயன்பாடு குவென்யா மொழியின் ஒலியியல் அழகையும் இலக்கண நுட்பத்தையும் வெளிப்படுத்துகிறது.

டோல்கீனின் எல்வுகள் அமரர்கள். ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்த கண்களுக்கு காடுகள் மறைவதும், நண்பர்கள் போவதும் தெரியும். அந்த நீண்ட நினைவின் சுமை அவர்களின் மொழியான சிந்தரினிலும் தெரிகிறது.

ஐரோப்பிய பழமையான மொழிக்குடும்பங்களில் (செல்டிக் மொழிகள்) காணப்படும் சிறப்பம்சமான மெய் எழுத்து மாற்றம் (consonant mutations) சிந்தரின் மொழியிலும் காணப்படுகிறது. அதாவது ஒரு சொல்லின் முதல் மெய் எழுத்து சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் தன்மை. எளிதாகச் சொன்னால், ஒரு சொல் தனியாக இருக்கும் போது ஒரு வடிவத்தில் இருக்கும்; ஆனால் அதற்கு முன் குறிப்புச் சொல் (article) அல்லது முன்னிடைச் சொல் (preposition) வந்தவுடன் அதன் முதல் எழுத்து மாறி வேறு வடிவம் எடுக்கும். எடுத்துக்காட்டாக, பரப் (parf-ஒரு புத்தகம்) என்ற சொல் “ஐ பாரப்” (i barf-அந்த புத்தகம்), “எ பாரஃப்” (a pharf-ஒரு புத்தகத்திற்கு) போன்ற பல வடிவங்களில் மாறும். இவ்வாறு ஒரு சொல் பல வடிவங்களில் தோன்றுவது இந்த மொழியின் உயிரோட்டத்தைக் காட்டுகிறது.

மொத்தத்தில் பார்க்கும்போது, சிந்தரின் மொழியில் ஒரு சொல் நிலையாக இல்லாமல், அதன் முன் வரும் சொற்களைப் பொறுத்து வடிவம் மாறிக்கொண்டே இருக்கும். இந்த மாறுபாடுகளே அந்த மொழியை இயற்கையான மொழிபோல உணரச் செய்கின்றன.

சிந்தரின் மொழியின் உச்சரிப்பை முழுமையாக எழுத்தில் விளக்குவது மிகவும் கடினம். ஏனெனில், ஒலி என்பது கேட்டு உணர வேண்டிய ஒன்று. இருப்பினும், பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி (International Phonetic Alphabet) அடிப்படையில் பிரிட்டிஷ் ஆங்கில ஒலிகளுடன் ஒப்பிட்டு இதை ஓரளவுக்குப் புரிந்துகொள்ளலாம். இந்த மொழியில் உயிரெழுத்துகள் மிகவும் தெளிவானவையாக இருக்கும்.

அ (/a/) என்பது “பாதர் (father)” என்ற சொல்லில் வரும் “அ” போலவும், இ (/e/-were) போலவும், ஐ (/i/-machine) இல் வரும் நீளமான “ஈ (ee)” போலவும், ஒ (/o/-for) என்ற சொல்லின் “ஒ” போலவும், உ (/u/ brute) இல் வரும் “உ” போலவும் ஒலிக்கும். அதே சமயம் /y/ என்ற ஒலி ஆங்கிலத்தில் இல்லாதது; அது பிரெஞ்சு “lune” என்ற சொல்லில் வரும் ஒலியைப் போன்றது. இரட்டையுயிர்கள் (diphthongs) என்பவை இரண்டு உயிரொலிகள் சேர்ந்து வரும் ஒலிகள்; இதில் /ai/ “rye” போலவும், /ei/ “grey” போலவும், /ui/ “ruin” போலவும், /au/ “loud” அல்லது “how” போலவும் ஒலிக்கும்; /ae/ மற்றும் /oe/ போன்றவற்றிற்கு நேரடி ஆங்கில இணை இல்லை.

மெய்யெழுத்துகள் பெரும்பாலும் ஆங்கிலத்துடன் ஒத்திருக்கின்றன: /p, b, t, d, c (k), g/ போன்றவை வழக்கமான ஒலிகள், /m, n, ng/ மூக்கொலிகள், /f/ அல்லது /ph/ “f” போலவும், /v/ சில இடங்களில் “f” போல மாறக்கூடியதாகவும் இருக்கும். /l/ சாதாரணமாக இருந்தாலும் /lh/ காற்றோட்டத்துடன் வரும் மென்மையான “l” ஆகும்; அதேபோல் /r/ உருட்டொலியாகவும், /rh/ அதே ஒலியின் காற்றோட்ட வடிவமாகவும் இருக்கும். /th/ “தின் (thin)” போலவும், /dh/ “திஸ் (this)” போலவும், /ch/ ஜெர்மன் “பச் (Bach)” போன்ற காற்றோட்டமுள்ள கடின ஒலியாகவும் உச்சரிக்கப்படும்.

சிந்தரின் மொழியில் அழுத்தம் மிக முக்கியமானது. இரண்டு அசைகள் கொண்ட சொற்களில் முதல் அசையிலேயே அழுத்தம் வரும், எடுத்துக்காட்டாக அரண் (ARan-அரசன்), களத் (GAladh -மரம்). மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அசைகள் கொண்ட சொற்களில் பொதுவாக கடைசிக்கு முந்தைய அசையில் அழுத்தம் வரும்; ஆனால் அந்த அசையில் நீளமான உயிர், இரட்டுயிர் அல்லது உயிருக்கு பின் இரண்டு மெய்கள் இருந்தால் மட்டுமே அது நடக்கும். எடுத்துக்காட்டுகள், செலிப்ரம்போர் (CeleBRIMbor-வெள்ளிக் கையுடையவன்), எல்பரேத் (ElBEreth-நட்சத்திரங்களின் அரசி) போன்றவை. இவ்வாறு ஒலி, அழுத்த விதிகளைப் பின்பற்றுவதால், சிந்தரின் மொழி ஓர் இனிமையான இசைநயத்துடன் ஒலிக்கிறது.

டோல்கீன் இன்று நம்மிடையே இல்லை. ஆனால் அவர் படைத்த மொழிகள் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோரால் இன்றும் கற்கப்படுகின்றன, பேசப்படுகின்றன, பாடப்படுகின்றன. மொழியிலிருந்து உலகு, உலகிலிருந்து கதை, கதையிலிருந்து கிடைக்கும் அற்புத உணர்வு, இதுவே டோல்கீன் உலகுக்கு வழங்கிய பரிசு.

டோல்கின் படைத்த உலகத்திற்கு சற்றும் சளைக்காத ஓர் உலகத்தையும் கதைமந்தார்களையும் கொண்டு உருவான கேம் ஆப் துரோன்ஸ் வலைத் தொடரின் டோத்ராகி, வலேரியன் மொழிகளைப் பற்றி அடுத்த கட்டுரையில் காண்போம்.

  • அருட்செல்வம்
  1. எல்விஷ் தளம்

2. குவென்யா மொழி இலக்கணம்

3. ரசிகர் பக்கம்

திரையில் பிறந்த மொழிகள் – 1

திரையில் பிறந்த மொழிகள் – 2

திரையில் பிறந்த மொழிகள் – 3

திரையில் பிறந்த மொழிகள் – 4

திரையில் பிறந்த மொழிகள் – 6

திரையில் பிறந்த மொழிகள் – 7

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now