எண்மத்தில் தமிழின் இனிமை : ஜோகூர் பாரு நிகழ்ச்சி

ஜோகூர் தமிழ்க்கல்வியாளர் சமூக நல மேம்பாட்டு இயக்கத்தின் சார்பில் எண்மத்தில் தமிழின் இனிமை என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது. செல்லினம், முரசு அஞ்சல் நிறுவனர், வடிவமைப்பாளர் முத்து நெடுமாறன் நிகழ்ச்சியை வழிநடத்தினார். 2026, ஜூலை 18ஆம் தேதியன்று ஜோகூர் பாருவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்​துகொண்டனர். 

தமிழாசிரியர்கள், பயிற்சி ஆசிரியர்கள், தமிழ்த்துறைத் தலைவர்கள் ஆகியோருக்கான ஒருநாள் நிகழ்ச்சி இது. எண்மத்தில் தமிழைக் கையாள்வது துல்லியமாகவும் அழகாகவும் பெருமைக்குரியதாகவும் இருக்க முடியும் என்னும் எளிய எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டது.

ஆசிரியரின் எண்மப் படைப்புகள் வகுப்பறைக்கு வெளியிலும்  பலரைச் சென்றடைகின்றன. அவை அக்கறையோடு உருவாக்கப்படும்போது மாணவர்களிடமும் பெற்றோரிடமும் சமூகத்திடமும் அமைதியான நன்மதிப்பைப் பெற்றுத் தருகின்றன. எண்மத் தமிழ்ப் படைப்புகளின் தரத்தை உயர்த்தவும், திறன்களைக் கூர்மைப்படுத்தவும், சிலரே கைவரப்பெற்ற ஒரு தளத்தில் தனித்து நிற்கவும் கிடைக்கும் அரிய வாய்ப்பு என ஒருங்கிணைப்பாளர்கள் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் தமிழ் ஆர்வலர்களும் ஆர்வமாகப் பதிவு செய்து கொண்டு நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். 

தமிழ்க் கல்வியாளரும் சமூக நல மேம்பாட்டு இயக்கத்தின் தலைவருமான நடராஜா சி. காளிமுத்து இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். தனது தலைமையுரையில், காலத்திற்கேற்ப தமிழையும் தொழில்நுட்பத்தையும் ஒருங்கிணைத்து மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்று வலியுறுத்தினார்.

கணினித் தமிழின் முன்னோடியான கணிஞர் முத்து நெடுமாறன் அவர்கள், தனித்தனிச் சிறப்பமர்வுகளின் வாயிலாக ஆசிரியர்களுக்குப் பயனுள்ள வகையில் நிகழ்ச்சியை வழிநடத்தினார். முரசு அஞ்சல் உதவியுடன் அறிவார்ந்த வழியில் தமிழில் தட்டெழுதும் முறைகள், சொல்வளம் தமிழ் விளையாட்டுச் செயலி, கணினித் தமிழின் 40 ஆண்டுகால வளர்ச்சிப் பயணம் பற்றிய உரையாடல் அனைத்தும் ஆசிரியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.

இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவரான இராம சேதுபதி, கணிஞர் முத்து நெடுமாறனின் சிறப்புரையைப் பாராட்டிப் பேசியதுடன், ‘உரு’ நூலில் இடம்பெற்றுள்ள சிந்தனைகள் குறித்தும் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். ஆசிரியர்கள் சிலரும் உரு படித்துவிட்டு நிகழ்ச்சியில் உரையாற்றினர். 

பயிலரங்கு, உரைகளைத் தொடர்ந்து நடைபெற்ற வினா–விடை பகுதியில், ஆசிரியர்கள் தங்களது ஐயங்களை முன்வைத்து விளக்கங்களைப் பெற்றுக்கொண்டனர். அரட்டைச் செயலி வழியாக நிகழ்ச்சி நடக்கும்போதே கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டிருந்தது. ஆசிரியர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றதுடன் பயனுள்ளதாக இருந்ததாகவும் குறிப்பிட்டனர். நிறைவாக, பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ்களும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன. பின்னர் குழுப் புகைப்படம் எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. நிகழ்ச்சி பற்றி மலேசிய நண்பன் உள்ளிட்ட ஊடகங்களிலும் செய்தி வெளியாகியிருந்தது. 

  • சக்தி
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now