திரையில் பிறந்த மொழிகள் – 4

காளகேயர்களின் கிலிகி

கட்டமைக்கப்பட்ட மொழிகளின் உருவாக்கம் இந்திய சினிமாவில் மிகவும் அரிதான ஒன்று. அந்த வகையில் முக்கியமான முயற்சிகளுள் ஒன்று பாகுபலி திரைப்படத்தில் இடம்பெற்ற கிலிகி மொழி (Kiliki). இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி உருவாக்கிய அந்த கற்பனை உலகில் மகிழ்மதி அரசுக்கு எதிராக நிற்கும் காளகேயர்கள் பேசும் மொழியாக கிலிகி வடிவமைக்கப்பட்டது. அந்த மொழியை உருவாக்கியவர் பாடலாசிரியரும் மொழி ஆர்வலருமான மதன் கார்க்கி.

ஒரு சமூகத்தை நம்பத்தகுந்ததாகவும் உயிர்ப்புடன் இருப்பதுபோலவும் காட்ட அதன் மொழியும் தனித்துவமாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே இந்த முயற்சியின் அடிப்படையாக இருந்தது. எதிரி பழங்குடியினரை வெறும் ஆடை, தோற்றம் அல்லது போர்த்திறன் வழியாக மட்டும் வேறுபடுத்திக் காட்டுவதற்குப் பதிலாக, அவர்களுக்கென ஒரு தனி மொழியையும் உருவாக்கினால் அவர்கள் வாழும் உலகம் பார்வையாளர்களுக்கு இன்னும் தெளிவாகவும் உண்மையாகவும் தோன்றும் என்ற சிந்தனையே இந்த முயற்சிக்கு பின்னணியாக அமைந்தது.

ஆஸ்திரேலியாவில் முனைவர் பட்டம் பயின்றுக் கொண்டிருந்த காலத்தில், பகுதி நேரமாக குழந்தைகளுக்கு பாடம் கற்பித்துக் கொண்டிருந்த போதுதான் கார்க்கிக்கு ஒரு வித்தியாசமான சிந்தனை தோன்றியது. பல மொழிகளின் வேறுபாடுகளை குழந்தைகளுக்கு விளக்கிச் சொல்லும் முயற்சியின் போது, “ஒரு புதிய மொழியை உருவாக்கிப் பார்க்கலாமே?” என்ற யோசனை உருவானது. அப்படி பிறந்தது தான் “க்ளிக்” (Cliq) என்ற சிறிய பரிசோதனை மொழி. அதில் “மின்” என்பது “நான்”, “நிம்” என்பது “நீ” போன்ற அடிப்படைச் சொற்களை உருவாக்கி, எளிய வாக்கியக் கட்டமைப்புகளையும் அமைத்தனர். அந்த மொழி சுமார் நூறு சொற்கள் வரை வளர்ந்தது; அதில் சிறிய பாடல்களையும் அவர்கள் உருவாக்கிப் பார்த்தனர்.

அந்த நூறு சொற்கள் கொண்ட ‘க்ளிக்’ மொழியே பின்னர் ‘கிலிகி’ மொழிக்கான விதையாக அமைந்தது. ராஜமௌலியின் கதைத் தேவைக்கு ஏற்ப அதை விரிவாக்கிக் கொண்டார் கார்க்கி. குறிப்பாக, படத்தில் கிலிகி பேசப்படும் பகுதிகளுக்கு வசன விளக்கம் (subtitles) இருக்காது என்று தீர்மானிக்கப்பட்டதால், மொழியின் ஒலியே அதன் உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் பணியாற்றினார். போர்க்களத்தில் எதிரி பேசும் அறியாத மொழி கேட்கும் போது ஏற்படும் அச்ச உணர்வை உருவாக்க வேண்டும் என்பதே இலக்கு. அதனால் கடினமான, கூர்மையான மெய்யெழுத்துகள், சுருக்கமான ஒலியமைப்புகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டன; இவை மொழிக்கு ஒரு கடுமையான, போர்முனைத் தன்மையைக் கொடுக்கின்றன.

சொற்களின் ஒலியமைப்பு, வாக்கியக் கட்டமைப்பு, உச்சரிப்பு விதிகள் ஆகியவை அனைத்தும் திட்டமிட்டு அமைக்கப்பட்டதால், கிலிகி வெறும் கற்பனைச் சொற்களின் தொகுப்பாக இல்லாமல் இயல்பான மொழியைப் போல செயல்பட முடிந்தது. திரைப்படத்தில் நடித்த நடிகர்களுக்கும் இந்த மொழியை சரியாக உச்சரிக்க சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. கிலிகி மொழியில் இன்றளவில் சுமார் 3000 சொற்கள், 22 எழுத்துகள், 40 இலக்கண விதிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

கிலிகி (KiLiKi) மொழியை முதலில் கேட்கும்போது அது கற்பனை மொழி போல தோன்றினாலும், அதை நெருக்கமாகப் பார்த்தால் மிகவும் ஒழுங்கான இலக்கண அமைப்பும், நினைவில் நிற்கும் விதிகளும் கொண்ட ஒரு மொழி என்பதை உணர முடிகிறது. இந்த மொழியின் அழகு, ஒவ்வொரு சொல்லும் தனியாக இல்லாமல், மற்ற சொற்களுடன் தொடர்பு கொண்டு இயங்குவது.

இந்த தொடர்பை நம்மால் தெளிவாகப் பார்க்க முடிவது திசைச் சொற்களிலேயே. எடுத்துக்காட்டாக, “முன்” (Footh), “பின்” (Thoof) என்ற இரண்டு சொற்கள் ஒலியியல் மாற்றம் (phonetic reversal) மூலம் உருவாகின்றன. ஒரே ஒலியை தலைகீழாக மாற்றினால் ஒரு சொல்லின் எதிர்ச்சொல் கிடைக்கும். இதே போல், வருதல் (hoofaani), செல்லுதல் (fahuni) போன்ற வினைச்சொற்களிலும் இந்த விதி செயல்படுகிறது. இதனால் கிலிகியில் சொற்களை நினைவில் வைத்துக்கொள்ளுதல் மிகவும் எளிதாகிறது. திசைகளைப் பயன்படுத்தும் போது, லார் (Laar – இடது), ரால் (Raal – வலம்), மீக் (Meek – மேல்), கீம் (Keem – கீழ்) போன்ற சொற்கள் நேரடியாகவும் தெளிவாகவும் பயன்படுகின்றன.

இலக்கண ரீதியாகப் பார்த்தால், கிலிகி ஒரு விகுதி மாற்ற மொழி (inflecting language). பெயர்ச்சொற்களுக்கு பின்னொட்டு சேர்ப்பதன் மூலம் அவற்றின் வேற்றுமை காட்டப்படுகிறது. பன்மை உருவாக்க “க்லே-kle” சேர்த்தால் போதும். து (thu) – சொல், துக்லே (thukle) – சொற்கள். உடைமைக்காக “டா-ta” (min-ta – என்னுடைய), செயப்படுபொருளுக்காக “யா (ya)”, இடத்திற்காக “சே(chae)”, காலத்திற்காக “டிக்கே (tikae)” போன்ற உருபுகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், வாக்கியத்தில் சொற்களின் வரிசை மாறினாலும் பொருள் மாறாது.

வினைச்சொற்கள் மிகவும் எளிமையான விதியைப் பின்பற்றுகின்றன. எல்லா வினைச் சொற்களும் “நீ (ni)” என்று முடியும். பாஹாணி (bahaani – பேசுதல்), ஹூபாணி (hoofaani – வருதல்). காலங்களை காட்ட “கா” (ga-கடந்த), “டீ” (de-நிகழ்), “பு” (fu-எதிர்) பின்னோட்டுகள் சேர்க்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, “ஹூபாணி-டீ” (hoofaani-de-வருகிறான்), “ஹூபாணி-கா” (hoofaani-ga-வந்தான்), “ஹூபாணி-பு” (hoofaani-fu-வருவான்).

உடல் பாகங்களிலிருந்து வினைச் சொற்கள் உருவாக்குவது இதன் தனித்துவமான அம்சம். நா (naa – கண்) என்ற சொல்லில் இருந்து நாநி (naani – பார்க்க), நாநானி (naanaani – பார் – see) போன்ற வினைச்சொற்கள் உருவாகின்றன. அதேபோல் விபி (vibi – காது) → விபினி (vibini – கேட்க), “விபிவிபினி (vibivibini- கவனமாக கேட்க), “மோ” (moa-மூக்கு) → “மோனி” (moani-மணம் அறிதல்), “வோக்” (voag-வாய்) → “வோகினி” (voagini-சாப்பிடுதல்). இதனால், ஒரு உடல் பகுதியின் பெயரே அதன் செயல்பாட்டை நினைவூட்டுகிறது. இதே அமைப்பு “செண்டி (Sendi-sense)” என்ற சொல்லிலும் தொடர்கிறது — “நாசேன்” (Naasen-பார்வை), “விபிசேன்” (Vibisen-கேள்வி), “மோசேன்” (Moasen- மணம்).

இதேபோன்ற விதி, உணர்வுகளை வெளிப்படுத்தும் சொற்களிலும் தொடர்கிறது. கிலிகி மொழி உள்ளுணர்வை லுடி என்றும், உணர்ச்சி வெளிப்பாட்டை லிடிக்கா (Lidikaa) என்றும் வேறுபடுத்துகிறது. “கிமிலு” (Kimilu-சோகம்) உள்ளே இருக்கும் உணர்வு; “நாநீனி” (Naaneeeni-அழுதல்) அதன் வெளிப்பாடு.

வண்ணங்களிலும் கிலிகி மொழி ஒரே மாதிரியான விதியை பின்பற்றுகிறது. ஒரு பெயர்ச்சொல்லுக்கு “ஜா(-ja)” என்ற பின்னொட்டு சேர்க்கப்பட்டால் அது பெயரடையாக மாறும். “ராரியு(Rariyu)” என்பது சிவப்பு நிறம்; “ராரியு-ஜா (Rariyu-ja)” என்றால் சிவப்பான. இதேபோல் வீயு-ஜா (Veeyu-ja-நீலம்), லீயு-ஜா (Leeyu-ja-பச்சை), காரியு-ஜா (Kaaryu-ja-கருப்பு) போன்ற சொற்கள் உருவாகின்றன. இந்த பின்னொட்டு விதி எல்லா வண்ணங்களுக்கும் பொதுவானது என்பதால், புதிய சொற்களையும் எளிதாக உருவாக்கலாம். மேலும், இந்த வண்ணங்களின் தீவிரத்தை காட்ட “உலே” (Ule-சற்றே), “டுலே” (Dule-மிதமான), “பிலே” (file-மிக அதிகம்) போன்ற சில இன்டென்சிபையர் (Intensifiers) பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, “உலே வீயுஜா” (Ule veeyu-ja) என்றால் இளநீலம், “பிலே வீயு ஜா” (File veeyu-ja) என்றால் மிகக் கருநீலம்.

கிலிகியில் கேள்விச் சொற்களும் ஒரு வகையான பாங்கைக் கொண்டுள்ளன: காக்வே (Kakve-என்ன), பாக்வே (Fakve-யார்), சக்வே- chakve(எங்கு), டிக்வே -Tikkve (எப்போது), கரிக்வே -Karikve (ஏன்). இந்த “க்வே-kve” முடிவு அவை கேள்வி சொற்கள் என்பதை உடனே காட்டுகிறது.

இவ்வாறு பார்க்கும்போது, கிலிகி மொழி ஒரு சீரற்ற கற்பனை அல்ல; அது திட்டமிட்ட அமைப்பு. ஒலியியல் மாற்றம், பின்னொட்டு அடிப்படையிலான இலக்கணம், ஒரே மாதிரி கேள்வி அமைப்பு, இவை அனைத்தும் சேர்ந்து இந்த மொழியை எளிதாக கற்றுக்கொள்ளக்கூடியதாக மாற்றுகின்றன.

இவ்வாறு ஒரு விளையாட்டுத் தேடலாகத் தொடங்கிய “க்ளிக்” என்ற சிறிய முயற்சி, பின்னர் ராஜமௌலியின் கற்பனை உலகில் விரிவடைந்து, திரையில் ஓர் இனத்தின் அடையாளமாக உயிர் பெற்ற கிலிகி மொழியாக மாறியது. “உலகின் மிகவும் இளம் மொழி” என்றும், அதே சமயம் கற்றுக்கொள்ள மிகவும் எளிதான மொழிகளில் ஒன்றாகவும் குறிப்பிடுகிறார் கார்க்கி. மேலும், இந்த மொழியை பொதுமக்களும் அறிந்து கற்கும் வகையில் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 — உலகளாவிய தாய் மொழிகள் தினத்தன்று (International Mother Language Day) கிலிகி மொழிக்கான அதிகாரப்பூர்வ இணையதளம் தொடங்கப்பட்டது.

உலக சினிமாவில் பிரம்மாண்ட கற்பனை உலகங்களை உருவாக்கிய படங்களுக்கு முன்னோடியாகக் கருதப்படும்,லோர்ட் ஆப் தி ரிங்ஸ் (The Lord of the Rings film series) திரைப்படங்களில் இடம்பெற்ற எல்விஷ் மொழிகளைப் பற்றி அடுத்த கட்டுரையில் காண்போம்.!

  • அருட்செல்வம்
  1. கிலிகி வெப் ஆர்கைவ்.
  2. கிலிகி பற்றிய செய்தி
  3. கிலிகி வலைத்தளம்
  4. கிலிகி வலைப்பக்கம்

திரையில் பிறந்த மொழிகள் – 1

திரையில் பிறந்த மொழிகள் – 2

திரையில் பிறந்த மொழிகள் – 3

திரையில் பிறந்த மொழிகள் – 5

திரையில் பிறந்த மொழிகள் – 6

திரையில் பிறந்த மொழிகள் – 7

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now