வசைபாட ஒரு மொழி
1966ஆம் ஆண்டு ஜீன் ரோடன்பெரி (Gene Roddenberry) உருவாக்கிய உலகப் புகழ்பெற்ற அறிவியல் புனைகதைத் தொடர் ஸ்டார் ட்ரெக். விண்வெளி ஆய்வு, அந்நிய இனங்கள், மனித சமூகம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட இந்த தொடரில் பல தனித்துவமான உயிரினங்கள் இடம்பெற்றன. அவற்றில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒன்று கிளிங்கன்கள் எனப்படும் போர்வீர இனமாகும். ஆரம்பத்தில் ஸ்டார் ட்ரெக் : தி ஒரிஜினல் சீரிஸ் தொடரில் கிளிங்கன்கள் சாதாரண எதிரி கதாபாத்திரங்களாக மட்டுமே காட்டப்பட்டனர்; அவர்கள் பேசும் மொழியும் உண்மையான மொழி அல்ல, பெரும்பாலும் பொருளற்ற ஒலிகளாகவே இருந்தன. ஆனால் காலப்போக்கில், இந்த இனத்தின் பண்பாடு, பழக்க வழக்கங்கள், போர்முறைகள் ஆகியவை விரிவாக வடிவமைக்கப்பட்டபோது, அவர்களுக்கு ஒரு முறையான மொழி தேவைப்பட்டதே கிளிங்கன் மொழி உருவாக்கத்திற்கு காரணமாகும்.
இந்த மொழியை உருவாக்க தேர்ந்தெடுக்கப்பட்டவர் மொழியியல் நிபுணர் மார்க் ஓக்ராண்ட் (Marc Okrand). அவரது ஸ்டார் ட்ரெக் பயணம் நேரடியாக கிளிங்கனில் தொடங்கவில்லை; ஆரம்பத்தில் வல்கன் மொழிக்காக ஒலிகளை உருவாக்கும் பணியிலேயே அவர் இணைந்தார். ஒரு காட்சியில் நடிகர்கள் ஆங்கிலத்தில் பேசியிருந்ததை மீண்டும் படமாக்காமல், உதடுகளின் இயக்கத்துடன் பொருந்தும் வகையில் புதிய ஒலிகளை உருவாக்கும் முயற்சியே அவருக்கு முதல் வாய்ப்பாக அமைந்தது. பின்னர் ஸ்டார் ட்ரெக் II: தி ரத் ஆப் கான் காலத்தில் அவரின் பங்களிப்பு கவனிக்கப்பட்டது; அதன் தொடர்ச்சியாக ஸ்டார் ட்ரெக் III: தி சர்ச் போர் ஸ்பாக் திரைப்படத்தின் தயாரிப்பாளர் அவரை அணுகி, கிளிங்கன் மொழியையும் உருவாக்குமாறு கேட்டார்.
குறுகிய காலத்திற்குள் இந்தப் பணியை மேற்கொண்ட அவர், தொடக்கத்தில் திரைப்பட வசனங்களுக்கு தேவையான அளவிலேயே மொழியை வடிவமைத்தார்; பின்னர் அது முழுமையான இலக்கண அமைப்புடன் விரிவடைந்தது. அவர் உருவாக்கிய சொற்கள் ஆரம்பத்தில் குறைவாக இருந்தாலும், பின்னர் ரசிகர்கள், ஆர்வலர்கள் அதை விரிவுபடுத்தி, உலகளாவிய மொழி சமூகமாக மாற்றினர்; இன்றும் இந்த மொழி வளர்ந்து கொண்டே இருக்கிறது.

பொதுவாக உலகின் பெரும்பாலான மொழிகள் எழுவாய்-வினை-பயனிலை என்ற வாக்கிய அமைப்பை பின்பற்றுகின்றன; ஆனால் கிளிங்கன் மொழியில் பயனிலை-வினை-எழுவாய் என்ற அரிதான அமைப்பு பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டு: “யாஸ் விலேஜ் ஜீஹ்” (yaS vIlegh jIH) என்ற வாக்கியம் “அந்த அதிகாரியை நான் பார்க்கிறேன்” என்று பொருள் தருகிறது; இதில் யாஸ் என்பது அதிகாரி, விலேஜ் என்பது “நான் அவனை/அதை பார்க்கிறேன்” (என்ற முழுப் பொருளையும் தரும் அல்லது “பார்க்கிறேன்” என்ற பொருளை மட்டும் தரும்), ஜீஹ் என்பது நான் எனப் பொருள் தருகிறது. இவ்வாறு வாக்கிய அமைப்பை மாற்றுவதன் மூலம் மொழி மனிதர்களுக்கு புதிதாகவும் அந்நியமாகவும் தோன்றுகிறது.
மேலும், கிளிங்கன் மொழி ஓர் ஒட்டுநிலை மொழி (Agglutinative language) ஆகும்; அதாவது ஒரு சொல்லுக்குள் பல பொருள்களை இணைத்து உருவாக்கும் தன்மை கொண்டது. எடுத்துக்காட்டு: “விலேஜ் (vIlegh)” என்ற ஒரே சொல்லே “நான் அவனை பார்க்கிறேன்” என்ற முழு பொருளை தருகிறது; இதில் “விஐ (vI)” என்பது செய்பவரையும் பொருளையும் குறிக்கும் முன்னொட்டு, “லெக் (legh)” என்பது பார்க்கும் செயலைக் குறிக்கும் வினைச்சொல். இதற்கு மேலாக பின்னொட்டு சேர்த்து கேள்வி அல்லது வேறு இலக்கண மாற்றங்களையும் உருவாக்கலாம்; “டா-லெக்-அ?” (Da-legh-a) என்பது “நீ அவனை பார்க்கிறாயா?” என்று பொருள் தருகிறது. இவ்வாறு முன்னொட்டு மற்றும் பின்னொட்டு அமைப்புகள் கிளிங்கன் மொழியின் முக்கியமான அடையாளமாகும்.
“கிளிங்கன்(Klingon)” என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் பெயர், கிளிங்கன் மொழியில் ட்லஹிங்கன் (tlhIngan) என்று அழைக்கப்படுகிறது. இந்த பெயரும் மார்க் ஓக்ராண்ட் உருவாக்கிய மொழியியல் விதிகளின் அடிப்படையிலேயே வந்தது. “ட்லஹ் (tlh)” என்பது ஒரு தனித்துவமான ஒலி; அது “ட் + ல் + ஹ்” என்று பிரிக்கப்படாமல், ஒரே ஒலியாக உச்சரிக்கப்படுகிறது. “ட்லஹிங்கன்” என்ற சொல்லில் “ங்கன் (ngan)” என்பது “ஓர் இனத்தைச் சேர்ந்தவர்” என்ற பொருள் தரும் பின்னொட்டு ஆகும். இதனால் “ட்லஹிங்கன்” என்பது “கிளிங்கன் இனத்தைச் சேர்ந்த நபர்” என்ற பொருள் தருகிறது. “கிளிங்கன்” என்பது மனிதர்களுக்கு எளிதாக உச்சரிக்க மாற்றிய வடிவம் மட்டுமே; உண்மையான சொல் “ட்லஹிங்கன்” என்பதே. இந்த வேறுபாடு கிளிங்கன் மொழியின் அந்நிய தன்மையையும் அதன் வடிவமைப்பின் அறிவியல் அடிப்படையையும் வெளிப்படுத்துகிறது.
கிளிங்கன் மொழியில் எழுத்து வடிவுணர்வு (case-sensitive) இருப்பதால், பெரிய எழுத்து, சிறிய எழுத்து வேறுபாடு மிகவும் முக்கியமானதாகும்; ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் பெரிய எழுத்துகள் பெரும்பாலும் இலக்கண காரணங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன (எ.கா., வாக்கியத்தின் தொடக்கம், பெயர்கள்). ஆனால் கிளிங்கன் மொழியில் பெரிய, சிறிய எழுத்துக்கள் நேரடியாக ஒலியையும் பொருளையும் மாற்றக்கூடியவை. எடுத்துக்காட்டாக, “கிட்(qet)” என்பது “ஓடு” என்ற பொருள் தரும் சரியான கிளிங்கன் சொல்; ஆனால் இதையே (Qet) என்று பெரிய (Q) பயன்படுத்தி எழுதினால், அது முற்றிலும் வேறு ஒலியை குறிக்கும், மேலும் அந்த வடிவம் கிளிங்கன் அகராதியிலேயே இல்லாத ஒரு சொல்லாகும். அதாவது, கிளிங்கன் மொழியில் எழுத்து வடிவம் மாற்றப்பட்டால் புதிய பொருள் கிடைப்பதில்லை; பல சூழல்களில் அந்த சொல் தவறானதாகவே மாறிவிடும்.
மேலும் கிளிங்கன் மொழியில் சில எழுத்துகள் தனித்தனி எழுத்துகளாக அல்லாமல், இரண்டு அல்லது மூன்று எழுத்துகள் சேர்ந்து ஓர் ஒலியாக (single phoneme) கருதப்படுகின்றன. (எடுத்துக்காட்டாக, “ch”, “gh”, “tlh” போன்றவை). இவை ஆங்கிலத்தில் இரண்டு எழுத்துகளாக இருந்தாலும், கிளிங்கன் மொழியில் ஒற்றை ஒலியாக செயல்படுகின்றன. குறிப்பாக “ட்லஹ் (tlh)” என்பது கிளிங்கன் மொழியின் மிகவும் தனித்துவமான ஒலி; இது மனித மொழிகளில் அரிதாக காணப்படும் ஒலியாகும். இதை சரியாக உச்சரிக்க கற்றுக்கொள்வது சற்று கடினம். அதேபோல் ஒற்றை மேற்கோள் (apostrophe (’)) கூட கிளிங்கனில் ஒரு முழுமையான எழுத்தாகவே கருதப்படுகிறது. இது குரல்வளைத் தடை ஒலியை (glottal stop) குறிக்கும்; அதாவது குரல்வளை திடீரென நிறுத்தி உருவாக்கும் ஒலி. எடுத்துக்காட்டாக “கப்ளா (Qapla’)” என்ற சொல்லில் வரும் (’) ஒரு முக்கியமான ஒலி; அதை தவிர்த்தால் அல்லது தவறாக உச்சரித்தால் பொருள் மாறும்.
இந்த மொழியின் இன்னோர் ஆர்வமூட்டும் அம்சம், அதன் சொற்களஞ்சியத்தில் (vocabulary) வசைச் சொற்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஆகும். கிளிங்கன் சமூகத்தின் பண்பாடு போராட்டத்தையும் வீரத்தையும் மையமாகக் கொண்டது. அந்த பண்பாட்டில் ஒருவரை திட்டுவது அல்லது சவால் விடுவது ஒரு சாதாரண செயல் அல்ல; அது ஒரு வகையான கலை (art form) போல கருதப்படுகிறது. அதனால் கிளிங்கன் அகராதிகளில் கூட வசைச் சொற்களுக்கு தனியாக பிரிவு கொடுக்கப்பட்டுள்ளது. எ.கா, பேட்டாக் (petaQ) (பயனற்றவன் / கோழை / மதிப்பில்லாதவன்), டோட்ஷஹ் (toDSaH)(காப்பாற்றத் தகுதியில்லாதவன்), இண்டக்ஹ் (yIntagh) (முட்டாள்). ஒரு சமூகத்தின் மனப்பான்மை, நடத்தை, பண்பாடு ஆகியவற்றை எதிரொலிக்கும் ஓர் அமைப்பாக மொழி உள்ளது என்பதை இது காட்டுகிறது.
இந்த மொழி திரைப்படங்களுக்குள் மட்டுமே தங்காமல், நிஜ உலகிலும் ஒரு தனி இடத்தை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் ரசிகர்கள் இந்த மொழியை கற்றுக்கொண்டு பேசுகின்றனர். டூலிங்கோ செயலியில் கூட இந்த மொழியைக் கற்க முடியும்.
கிளிங்கன் மொழி நிறுவனம் [Klingon Language Institute (KLI)] எனப்படும் ஒரு உலகளாவிய அமைப்பு உலகம் முழுவதும் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. தொடக்கத்தில் இது ஹோல்ட் (HolQeD-கிளிங்கனில் “மொழியியல்” என்ற பொருள்) என்ற காலாண்டு இதழை 13 ஆண்டுகள் வெளியிட்டது. பின்னர் அச்சு வடிவத்தை நிறுத்தி மின்னணு வடிவமாக மாற்றியது; ஆனால் அது கூட சில காலத்திலேயே நிறுத்தப்பட்டது. இதற்கு மேலாக, ஜமே (jatmey) என்ற கற்பனை, கவிதை இதழையும் மூன்று தொகுதிகளாக வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பு, தற்போது பல மொழிபெயர்ப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. தி விசர்ட் ஆப் ஓஸ், எபிக் ஆப் கில்கமேஷ், மச் அடோ அபௌட் நதிங் (Much Ado about nothing) போன்ற புகழ்வாய்ந்த படைப்புகள் கிளிங்கன் மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
ஒவ்வோர் ஆண்டும், “பெரிய சந்திப்பு” என்ற பொருள் தரும் (qepʼaʼ) ஐந்து நாள் மாநாட்டை நடத்துகிறது. இதில் உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், கிளிங்கன் மொழியில் ஆர்வமுள்ள யாரும் கலந்து கொள்ளலாம். மேலும், டூலிங்கோ செயலியில் கிளிங்கன் மொழிக் கற்றல் பாடநெறியையும் நிர்வகித்து வருகிறது. அதோடு, அறிவியல் புனைகதை குறுங்கதைகள், வேதாகம நூல்கள், வில்லியம் ஷேக்ஸ்பியரின் படைப்புகள் போன்றவற்றையும் கிளிங்கன் மொழிக்கு மொழிபெயர்க்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த அமைப்பின் கோட்பாடு, “மொழி உலகங்களைத் திறக்கிறது (qoʼmey poSmoH Hol)” என்பதாகும். கிளிங்கன் மொழியையும் அதன் பண்பாட்டையும் அறிவியல் ரீதியாக ஆய்வு செய்ய உதவுவதே இதன் முக்கிய நோக்கம்.
திரையில் பிறந்த இந்த மொழிகள், கற்பனை உலகங்களுக்கு உயிர் கொடுத்த குரல்கள். ஒரு மொழி பிறந்தால் அதன் பின்னால் ஓர் உலகமும் பிறக்கும். அந்த உலகில் கதைகள் என்றும் உயிரோடு வாழும்.
(முற்றும்)
- அருட்செல்வம்
