ஒட்டிகள், (stickers) உரையாடல் செயலிகளில் பயன்படுத்தப்படுவது புதிதான ஒன்று அன்று. சொற்களாலும், உணர்ச்சிக் குறிகளாலும் (emoji) வெளிபடுத்த முடியாத சில உணர்ச்சிகளைச் செய்தியோடு சேர்ப்பதற்கு இவை பெரிதும் உதவுகின்றன.
புகழ்பெற்ற உரையாடல் செயலிகள், இந்தப் பயன்பாட்டை ஏற்கனவே சேர்த்து விட்டன. தெலிகிராம், லைன் போன்ற செயலிகளில் இவற்றின் பயன்பாடு மிகவும் அதிகமாகவே இருந்து வருகிறது. இலவசப் பயன்பாடு மட்டும் இன்றி, ஒட்டிகளை விலைக்கு வாங்கிப் பயன்படுத்தும் வழக்கமும் அதிகரித்து வருகிறது.
இதனை அறிமுகம் செய்த லைன் நிறுவனத்தினர், நூற்றுக்கணக்கான மில்லியன் அமெரிக்க டாலரை ஒவ்வொரு ஆண்டும் இந்த ஒட்டிகளின் வழி பொருளீட்டி வருகின்றனர். ஒட்டிகளின் உருவாக்கத்திற்கும் விற்பனைக்கும் பெரிய சந்தையே உள்ளது!
வாட்சாப் செயலியைப் பயன்படுத்தும் 150 கோடி பயனர்களும் இந்த வசதியை வரும் வாரங்களில் பயன்படுத்தலாம் என வாட்சாப் அறிவித்துள்ளது. தொடக்கத்தில் வாட்சாப்பின் சொந்த ஓவியர்களால் உருவாக்கப்படும் ஒட்டிகளே சேர்க்கப்படும் என்று கூறிய அந்நிறுவனம், இந்நிலை வரும் காலங்களில் மாறலாம் என்றும் கூறியுள்ளது.
ஒட்டிகள் உருவாக்கமும் விற்பனையும்
ஒட்டிகளை வடிவமைக்கும் ஓவியர்கள் கூகுள் பிளே வழியாகவும் ஆப்பிள் சிட்டோர் வழியாகவும் தங்கள் உருவாக்கங்களை வெளியிடலாம் என்றும் வாட்சாப் அறிவித்துள்ளது. இதற்கான வழிகாட்டல் கையேட்டையும் பதிப்பித்துள்ளது.
இருப்பினும், வாட்சாப்பிற்காகப் பதிப்பிக்கப்பட்ட ஒட்டிகளைத் தனிக்கைச் செய்யும் விதிமுறைகள் எவ்வாறு அமையும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. லைன் நிறுவனத்தினர், தமது செயலிக்காகப் பதிப்பிக்கப்படும் ஒட்டிகளைத் தாங்களே தனிக்கைச் செய்கின்றனர். தெலிகிராமோ எந்த விதத் தனிக்கையும் இல்லாமல், திறந்த வெளியாக தமது செயலிக்கான ஒட்டிகள் சந்தையை வைத்துள்ளனர். இதனால் மற்றவர் உருவாக்கங்களைத் திருடி விற்கும் வாய்ப்பும் அதிகம் ஏற்பட்டுள்ளது.
ஒட்டிகளின் பயன்பாடு மிகப் பெரிய சந்தையை உருவாக்கியுள்ளது. இதுவரை விலகி இருந்த வாட்சாப்பும் இதில் களமிறங்குவது இதனை மேலும் உறுதிப்படுத்துகிறது!
இணைப்பு:
1. Introducing Stickers: WhatsApp Blog
2. வாட்சாப் பகிர்வுகளிலும் இனி படங்களின் மேல் கிறுக்கலாம்!