ஆண்டிராய்டில் செல்லினத்தின் புதிய பதிகை வந்தது முதல், பல பயனர்கள் பலவாறான சிக்கல்களைக் குறித்து எழுதி வருகின்றனர்.
இவர்களுள் பலர், நாங்கள் வெளியிட்ட காணொலிகளைப் பின்பற்றி, அவர்களுக்கு ஏற்பட்ட அமைப்புச் சிக்கலை நீக்கியுள்ளதாக, மகிழ்ச்சியோடு தெரிவித்தும் வருகின்றனர்.
“பழைய செல்லினம் சரியாகத்தானே இருந்தது. ஏன் இந்த புதிய மேம்பாடு?” என்றும் சிலர் கேட்டுள்ளனர். பழைய செல்லினம், பல ஆண்டுகள் சரியாகவே இயங்கி வந்துள்ளது. பழைய ஆண்டிராய்டு கருவிகளில் இன்னும் சரியாகவே இயங்கும். ஆனால் ஆண்டிராய்டு பத்தாம் பதிகையோடு வரும் கருவிகளில் சரிவர இயங்காது.
ஆண்டிராய்டு-10, ஆண்டிராய்டு-11 இயங்குதளங்கள், பழைய செல்லினம் மேம்படுத்தப்படவேண்டும் என்ற அறிவிக்கையைக் காட்டியதையும் பலர் பார்த்திருப்பீர்கள்.
இந்தக் குறைகளைக் களையவே செல்லினம்-5.0 உருவாக்கப்பட்டது. புதிய பதிகை என்றாலும், பயன்பாட்டில் கூடியவரை செல்லினம் நான்கின் பெரும்பாலானக் கூறுகளை அப்படியே மாற்றாமல் வைத்திருக்கிறோம்.
ஆண்டிராய்டில் மாற்றங்கள்
கடந்த சில ஆண்டுகளில் ஆண்டிராய்டிலும் பல மேம்பாடுகள் ஏற்பட்டுள்ளன. பாதுகாப்பு, தனியுரிமை, பன்மொழிப் பயன்பாடு முதலியன, செல்லினத்தின் செயல்பாடுகளை நேரடியாகப் பாதிக்கும் மேம்பாடுகள்.
புதிய செல்லினத்தில் செய்யப்பட்ட சிற்சில மாற்றங்கள், ஆண்டிராய்டின் இந்த மேம்பாடுகளுக்கு ஏற்ப செய்யப்பட்ட மாற்றங்களே! செல்லினத்தைப் பதிவிறக்கம் செய்து அமைக்கும் செயல், இந்த மாற்றங்களால் பல பாதிப்புகளை அடைந்துள்ளதை உணர்கிறோம்!
எங்களுக்கு உதவி செய்ய முன்வந்த பல அன்பான பயனர்களின் கருத்துகளைக் கேட்டு, அதிகமாகத் தோன்றும் சிக்கல்களை நீக்கி, செல்லினத்தின் 5.0.1ஆம் பதிகையை இரண்டு நாட்களுக்குமுன் வெளியிட்டோம்.
இந்தப் பதிகையைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திய பலர், செல்லினம் அவர்களின் ஆண்டிராய்டில் மீண்டும் முழுமையாக இயங்குவதாக மகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.
இருப்பினும், செல்லினம் சரிவர இயங்குவதற்கு சில அமைப்பு முறைகளை சரியாகச் செய்ய வேண்டும். தமிழ் விசைமுகங்களை இயக்கி விடுவதும், செல்லினத்தைத் தங்களின் விருப்ப உள்ளிடுமுறையாகத் தேர்ந்தெடுப்பதும் இன்றியமையாதவை.
காணொலி விளக்கம்.
இந்த அமைப்பு முறைகளை முழுமையாக விளக்க, பதிவிறக்கம் முதல் பயன்பாடு வரைக் காட்டும் காணொலி ஒன்றை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம்.
அமைப்புச் சிக்கலை எதிர்நோக்கியிருந்த பல பயனர்களுக்கு இந்தக் காணொலியை அனுப்பினோம். இதில் காட்டப்பட்டிருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றியதன் வழி, அவர்கள் சிக்கலும் நீங்கியதாக மறுமொழி தந்தனர்.
எஞ்சியுள்ள பயனர்களுக்கும் இந்தக் காணொலி பயனளிக்கும் என்ற நம்பிக்கையில் அதனை இங்கு பகிர்கின்றோம். ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்ட செல்லினத்தை நீக்கிவிட்டு, அதன்பின் இந்த வழிமுறையைப் பின்பற்றுவதே சிறந்த பயனை அளிக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றிய பிறகும் சிக்கல் தொடர்ந்து இருந்தால், எங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்: [email protected] அல்லது வாட்சாப் வழி தொடர்பு கொள்ள விரும்பினால் (செய்திகள் மட்டும்), எங்கள் தற்காலிக வாட்சாப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் : +60179570560
புதிய செல்லினம் தொடர்பான மற்ற காணொலிகளையும் நீங்கள் இந்த இணைப்பில் காணலாம்:
https://www.youtube.com/c/sellinam
தொடர்புடையவை:
- ஆண்டிராய்டு 10-க்கான செல்லினம்-5.0
- வாவே செயலிக் கூடத்தில் செல்லினம்-5.0
- தமிழ் விசைமுகங்கள் தேர்வு : செல்லினம் 5.0
