பழைய ஆண்டிராய்டு கருவிகளுக்கான செல்லினம்

பழைய ஆண்டிராய்டு கருவிகள் சிலவற்றில், செல்லினத்தை முறைப்படி அமைக்க முற்படும்போது, அமைப்புச் செயல் செயலிழந்து “Unfortunately, Settings has stopped” எனும் செய்தியைக் கொடுப்பதாக ஓரிரு பயனர்கள் தெரிவித்துள்ளனர்.

பழைய ஆண்டிராய்டு கருவிகள்

இந்த வழு, செல்லினத்தில் உள்ளது அல்ல. மொழிகளுக்கான விசைமுகங்களைத் தேர்வு செய்ய ஆண்டிராய்டிடம் ஒப்படைக்கும் போது ஏற்படும் வழு. அதுவும் குறிப்பிட்ட சில வகைக் கருவிகளில் மட்டும் ஏற்படும் வழு.

குறிப்பாக ஆண்டிராய்டு 5.1.1 பதிகையில் இயங்கும் லெனொவோ A6020 வகைக் கருவிகள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகுகின்றன. இந்தக் கருவியோ, இந்த வழு தோன்றும் வேறொரு கருவியோ உங்களிடம் இருந்தால், இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவும்.

மேற்குறிப்பிட்டது போல “Unfortunately, Settings has stopped” எனும் செய்தி தோன்றினால் மட்டுமே இந்த வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். மற்ற சிக்கல்கள் அனைத்தையும் செல்லினத்தைச் சரிவர அமைப்பதன் வழியே நீக்கிவிடலாம்.

பழைய ஆண்டிராய்டு – செல்லினம் 4

  1. முதலில் நீங்கள் ஏற்கனவே பதிவிறக்கம் செய்து வைத்துள்ள செல்லினத்தின் வழி எங்களுக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும்.
  2. பதிவிறக்கம் செய்து வைத்துள்ள புதிய செல்லினத்தை நீக்க வேண்டும்.
  3. கூகுள் பிளே வழி செயலிகளின் மேம்பாட்டை (update) முடக்க வேண்டும்.
  4. கூகுள் பிளே செயலியை, மேம்பாட்டாளர் நிலைக்கு மாற்ற வேண்டும்.
  5. உங்கள் மின்னஞ்சலுக்கு நாங்கள் அனுப்பிய இணைப்பைத் திறந்து செல்லினம்-4ஐ பெற்றுக் கொள்ள வேண்டும்.

இந்தப் படிகளை விளக்கும் காணொலி ஒன்றை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம்:

முக்கியக் குறிப்பு

இது ஒரு நிரந்தரத் தீர்வு அல்ல. தரமிறக்கும் நடவடிக்கை (downgrade). நீங்கள் வைத்திருக்கும் ஆண்டிராய்டு 5.0 அல்லது 5.1 கருவியை இன்னும் சில காலம் பயன்படுத்துவதாக இருந்தால் இந்த வழிமுறையைப் பின்பற்றி செல்லினத்தின் பழைய பதிகையைப் பெற்றுக் கொள்ளலாம்.

பயனர்கள் புதிய ஆண்டிராய்டுக்கு மாறிவிட்டபின் இந்தச் சேவை நிறுத்தப்படும்.

ஆண்டிராய்டு 6.0க்கும் மேற்பட்ட இயங்கு தளத்தைக் கொண்ட கருவியாக இருந்தால், செல்லினத்தின் புதிய ஐந்தாம் பதிகையைப் பயன்படுத்துவதே சிறப்பானது.

புதிய பதிகையில் சிக்கல் இல்லை. ஏற்கனவே செல்லினத்தைப் பயன்படுத்தி வந்த பயனர்கள் சில அமைப்பு முறைகளை செய்ய வேண்டும். அவ்வளவுதான்.

செல்லினம் 5.0க்கான வழிகாட்டிக் காணொலிகள்:

https://youtube.com/c/sellinam

தொடர்புடையவை:

  1. லெனொவோ A6000இல் செல்லினம்
  2. லெனொவோ கருவிகளில் உள்ள தமிழ் எழுத்துருவில் ஒரு வழு!
Did you like this? Share it: