செல்லினம் 5.0.3ஆம் பதிகை இன்று வெளியீடு கண்டது. ஆங்கிலத்தில் வரும் சின்னங்கள் விசைமுகத்தில், விடுபட்டிருந்த இந்திய ரூபாய் சின்னம் இந்தப் பதிகையில் சேர்க்கப்பட்டது.
செல்லினம் உலகளாவிய அளவில் பல நாடுகளில் வாழும் பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், என்பதுக்கும் மேற்பட்ட விழுக்காட்டினர் இந்தியாவில்தான் வாழ்கின்றனர். எனவே, செல்லினத்தில் உள்ள தமிழ் விசைமுகங்களில் சின்னங்கள் பகுதியில் (Symbols keyboard) இந்திய ரூபாய் சின்னம் இயல்பாகவே சேர்க்கப்பட்டிருந்தது.
தமிழில் எழுதும்போது ரூபாய் சின்னத்தை எங்கும் தேட வேண்டியதில்லை. ஆங்கிலத்தில் எழுதும்போது மட்டும் சின்னங்கள் பகுதியில் ரூபாய் தோன்றவில்லை. பல பயனர்கள் செல்லினத்தில் உள்ள ஆங்கில விசைமுகத்தையும் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். ஆங்கிலத்தில் எழுதும்போது, ரூபாய் சின்னத்தை உள்ளிட முடியாதது, இவர்களுக்கு ஒரு குறையாக இருந்தது.
இந்தக் குறையை செல்லினம் 5.0.3ஆம் பதிகை நீக்கியுள்ளது. இனி தமிழ் விசைமுகங்களில் உள்ளது போலவே ஆங்கில விசைமுகத்தின் சின்னங்கள் பகுதியில் இருந்தும், ரூபாய் சின்னத்தை உள்ளிடலாம்.

இந்தியாவில் உள்ள பயனர்களின் தேவைக்காக ஆங்கிலம் (இந்தியா) (English (India)) என்னும் புதிய விசைமுகம், இந்தப் புதிய 5.0.3ஆம் பதிகையில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இருந்த ஆங்கிலம் (English) என்னும் விசைமுகம் எந்த மாற்றமும் இன்றி அப்படியே வைக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில் வாழும் பயனர்களுக்கு ரூபாய் சின்னத்தைப் பயன்படுத்த வேண்டிய தேவை மிகக் குறைவே.
ரூபாய் சின்னத்தை அதிகம் பயன்படுத்துவோர் ‘ஆங்கிலம் (இந்தியா)’ என்னும் விசைமுகத்தையும், மற்றோர் ‘ஆங்கிலம்’ என்னும் விசைமுகத்தையும் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம்.
இந்த இரண்டு ஆங்கில விசைமுகங்களிலும் ரூபாய் சின்னம் இருக்கும். ‘ஆங்கிலம் (இந்தியா)’வில் இயல்பாக இருக்கும். மற்றதில் விசையின் நீண்ட அழுத்தத்தில் (long press) இருக்கும்.
ரூபாய் சின்னத்தைத் தவிர, இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஆங்கிலம் தொடர்பான மற்றக் கூறுகள், படிப்படியாகச் சேர்க்கப்படும்.
விசைமுகங்கள் தேர்வு:
‘ஆங்கிலம் (இந்தியா)’ விசைமுகத்தைத் தேர்வு செய்ய இரண்டு வழிகள் உள்ளன.
முதல் வழி, உங்கள் ஆண்டிராய்டின் இயக்க மொழியாக இதனைச் சேர்ப்பது. ஆண்டிராய்டின் மொழித் தேர்வுக்குச் சென்று இதனைச் செய்யலாம்.

இரண்டாவது, ‘ஆங்கிலம் (இந்தியா)’ விசைமுகத்தை வெளிப்படையாகத் தேர்ந்தெடுப்பது. செல்லினத்தின் அமைப்புக்குச் சென்று இதனைச் செய்யலாம்.

இந்த இரண்டில் ஒன்றைச் செய்தாலே போதும்.
மொழித்தேர்வுக்கும், விசைமுகத் தேர்வுக்கும் ஏற்கனவே பதிப்பிக்கப்பட்ட காணொலிகளை கீழுள்ள இணைப்புகளில் காணலாம்:
- ஆண்டிராய்டில் ஆங்கிலத்தோடு தமிழையும் பயன்பாட்டு மொழியாகச் சேர்ப்பது எப்படி.
- செல்லினத்தில் விரும்பும் விசைமுகங்களைச் சேர்ப்பது எப்படி.
தொடர்புடையவை:
- மீள்பார்வை : அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்.
- செல்லினத்தை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்.
- செல்லினம் யூடியூப் ஒளியலை (Sellinam YouTube Channel).