தமிழ் விசைமுகத்திற்கு மாறுவதைத் தடுக்கும் சிக்கல்

தமிழ் விசைமுகத்திற்கு மாறுவதைத் தடுக்கும் சிக்கல் ஒன்று ஆண்டிராய்டு பயனர்கள் பலரை பாதித்து வந்துள்ளது.

குறிப்பாக செல்லினம்-4ஐ பயன்படுத்தி வந்த பலர் செல்லினம்-5க்கு மாறும்போது, இதனை எதிர்நோக்கி வருகின்றனர்.

இது செல்லினத்தின் வழு அல்ல. இதற்குக் காரணம், விசைமுக மாற்றத்தை செல்லினம் நான்கும் ஐந்தும் கையாளும் முறையில் உள்ள வேறுபாடே!

இதன் பின்னணியைப் பிறகு காண்போம். முதலில் ஒரு நற்செய்தி. இந்தச் சிக்கலைக் கண்டெடுத்து தானாகவே தீர்வினை வழங்க செல்லினத்திலேயே புதிய வசதி ஒன்றைச் சேர்த்துவிட்டோம்!

தமிழ் விசைமுகத்திற்கு மாறுவதற்கானச் சின்னத்தைத் தட்டும்போது, இந்த வசதி குறுக்கிட்டு தன் வேலையைச் செய்யும். ஆங்கிலத்தைத் தவிர வேறு எந்த விசைமுகமும் செல்லினத்தின் அமைப்பில் சேர்க்கப்படவில்லை என்றால், ஓர் அறிவிப்பைக் காட்டி உடனே சேர்ப்பதற்கான வாய்ப்பினையும் செல்லினம் வழங்கும்.

அறிவிப்பைக் காட்டும் போது, தமிழ் விசைமுகங்களை எப்படிச் சேர்ப்பது என்பதை விளக்கும் ஒரு காணொலியும் உடன் காட்டப்படும். இந்த வசதி செல்லினம் 5.0.2இல் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பதிகை படிப்படியாக வெளியிடப்பட்டு வருகின்றது.

தமிழ் விசைமுகத்திற்கு ஏன் மாற முடியவில்லை?

இரண்டு காரணங்கள் உள்ளன.

முதலாவது, உங்கள் ஆண்டிராய்டில் தமிழ் ஒரு பயன்பாட்டு மொழியாகச் சேர்க்கப்படவில்லை என்றால், தமிழ் விசைமுகத்திற்கு மாறுவதை ஆண்டிராய்டு தானாகவே ஏற்படுத்தாது. இது ஒரு வழுவோ (bug) கட்டுப்பாடோ அல்ல. வசதி.

பழைய ஆண்டிராய்டுகளில் பயன்பாட்டு மொழி என்னும் வசதி பரவலாக இல்லை. எனவே இதுபோன்ற சூழல் எழாமல் இருந்தது. புதிய ஆண்டிராய்டுகளில் பயன்பாட்டு மொழி என்பது மிக முக்கியமான ஒரு கூறு.

இரண்டாவது காரணம், தமிழ் ஒரு பயன்பாட்டு மொழியாகச் சேர்க்கப்படாவிட்டாலும், தமிழ் விசைமுகங்களை இயக்கி விடாமல் வைத்திருப்பது.

இந்த இரண்டு காரணங்கள் குறித்து ஏற்கனவே வேறொரு கட்டுரையில் தெளிவாக எழுதியிருந்தோம். ஒரு காணொலியையும் கட்டுரையில் இணைத்திருந்தோம்.

எல்லாம் சரியாக இருந்தும் தமிழுக்கு மாற்ற முடியவில்லை!

அமைப்புகள் எல்லாம் சரியாக இருந்தும் தமிழ் விசைமுகத்திற்கு மாற முடியவில்லை என சில பயனர்கள் தெரிவித்தனர். இதுபோன்ற சூழலில், செல்லினத்தை முழுமையாக நீக்கிவிட்டு இந்தக் காணொலியில் உள்ளதுபோல் முழுமையாகச் செய்யும்படி ஆலோசனைக் கூறினோம்.

அவ்வாறு செய்தபின் சரியாக உள்ளது என எங்களுடன் தொடர்புகொண்ட பெரும்பாலோர் தெரிவித்தனர். இவர்களுக்கு ஏன் தொடக்கத்தில் சிக்கல் ஏற்பட்டது என்பதை எங்களால் உறுதி படுத்த இயலவில்லை.

ஒருவேளை பதிவிறக்க அமைப்பு முறை முழுமையாக நிறைவடையாமல் போயிருக்கலாம். பயனர்கள் அதிகம் எங்களுடன் பகிரும்போது தெளிவு கிடைக்கும். கிடைக்கும்போது உங்களுடன் பகிர்கிறோம்!

செல்லினம் 5.0.2இல் சேர்க்கப்பட்டிருக்கும் இந்தப் புதிய வசதி, நெடுநாள் பயனர் பலரின் கனிவான வரவேற்பைப் பெறும் என நம்புகிறோம்!

தொடர்புடையவை:

  1. செல்லினம் : ஆண்டிராய்டில் முறையாக அமைத்தல்
  2. தமிழ் விசைமுகங்கள் தேர்வு : செல்லினம் 5.0
  3. ஆண்டிராய்டு 10-க்கான செல்லினம்-5.0