கூகுள் நிறுவனம் 2025 ஆண்டில் அறிமுகப்படுத்திய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களையும், அவற்றைப் பயன்படுத்துவதற்கான 40 முக்கியமான குறிப்புகளையும் பகிர்ந்துள்ளது. ஜெமினி 3 மொழி மாதிரி முதல் நோட்புக்எல்எம் (NotebookLM) வரை பல்வேறு செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது என்பதை விளக்கியுள்ளது.

ஜெமினி 3
கடினமான தலைப்புகளை எளிதாக்கும் ஜெமினி 3 மொழி மாதிரி, காட்சி விளக்கங்கள் மூலம் அறிவியல், தொழில்நுட்ப சங்கதிகளை விளக்க உதவுகிறது. ஆராய்ச்சிக் கட்டுரைகளை எளிய வழிகாட்டிகளாக மாற்றும் திறன் கொண்டது. கூகுள் தேடுதலில் உள்ள செயற்கை நுண்ணறிவுக் கூறு (AI Mode) இப்போது ஜெமினி 3 உடன் இணைந்து, வீட்டுக் கடன் தொடர்பான கேள்விகளுக்கு தனிப்பயன் கால்குலேட்டர்களை உருவாக்கித் தருகிறது. இதுபோன்று பலவற்றை உருவாக்க இந்தக் கூறு உதவியாக உள்ளது.
கற்றலுக்கான புதிய கருவிகள்
நோட்புக்எல்ம் (NotebookLM) இப்போது இரண்டு வகையான ஆராய்ச்சி முறைகளை வழங்குகிறது. “Fast Research” விரைவான தேடலுக்கு ஏற்றது. “Deep Research” விரிவான பகுப்பாய்வுக்கு உதவுகிறது. இந்தக் கருவி புதிர்கள், குறிப்பு அட்டைகள் உருவாக்கவும் உதவுகிறது. வழிகாட்டலுடன் கூடிய கற்றல் (Guided Learning) அம்சம் மாணவர்களுக்கு ஊடாடும் பயிற்சியாளராக செயல்படுகிறது. பாடப் பொருள்களை பதிவேற்றினால், அதிலிருந்து படிப்பு வழிகாட்டிகளை உருவாக்கித் தருகிறது.
ஐஓஎஸ் பயனர்களுக்கான ஓர் அம்சம், இணையதளங்களில் உள்ள சிக்கலான உரைகளை எளிமைப்படுத்துகிறது. வலைப்பக்கத்தில் உள்ள கடினமான பகுதிகளைத் தேர்வு செய்து, “Simplify” பொத்தானை அழுத்தினால் போதும்.
பயணத்துக்கான வசதிகள்
கூகுள் மேப்ஸில் இப்போது ஜெமினி உதவி கிடைக்கிறது. “என் பாதையில் மலிவான, சைவ உணவு வழங்கும் உணவகம் உள்ளதா? அங்கு வாகன நிறுத்தம் வசதி எப்படி?” என்று கேட்கலாம். “அங்கு போகலாம்” என்று சொன்னால் வழிகாட்டுதல் தொடங்கும். வண்டியோட்டும் சக்கரத்தில் இருந்து கையை எடுக்காமலேயே இவற்றைச் செய்யலாம்.
விமானச் சேவைகளை (Flight Deals) அடையாளும் காட்டும் வசதியும் பயணத் திட்டமிடலை எளிதாக்குகிறது. “பிப்ரவரியில் ஒரு வாரம் விடுமுறை எடுக்கிறேன். மலிவான, நல்ல உணவு கிடைக்கும் கதகதப்பான இடம் வேண்டும்” என்று கேட்டால், பொருத்தமான இடங்களுடன் கையைக்கடிக்காத விலையைக் காட்டும். கூகுள் மேப்ஸில் திரைச்சுடுவையைச் சேமிக்கலாம். பயணப் பதிவுகள், செய்திகள், சமூக ஊடகங்களில் பார்த்த இடங்களின் புகைப்படங்களை எடுத்து வைத்தால், ஜெமினி அவற்றிலிருந்து இடப் பெயர்களைக் கண்டறிந்து பட்டியலாக்கித் தரும்.
வேலைகளை எளிதாக்கும் ஏற்பாடுகள்
பிக்செல் வாட்ச் 4-இல் ஒரே கையில் சமிஞ்ஞை தரும் (One-handed gestures) உள்ளன. கட்டைவிரலையும் ஆள்காட்டி விரலையும் இருமுறைத் தொட்டு விலக்குவது, மணிக்கட்டைத் திருப்புவது (Double pinch, Wrist turn) போன்ற சைகைகள் மூலம் திரையைத் தொடாமல் அறிவிப்புகளை நிர்வகிக்கலாம். Raise to Talk அம்சம் மூலம் கைக்கடிகாரத்தை வாய் அருகே கொண்டு வந்து பேசத் தொடங்கினால் போதும். “Hey Google” என்று சொல்ல வேண்டாம்.
பிக்செல் 10 தொலைப்பேசிகளில் குறிப்பெடுக்கும் (Take a Message) வசதி உள்ளது. தவறவிட்ட அழைப்புகளுக்கு நிகழ்நேர படியெடுப்பை (transcript) உருவாக்குகிறது. செய்ய வேண்டிய செயல்களின் பட்டியலையும் செயற்கை நுண்ணறிவு தயாரிக்கிறது.
கூகுள் நிறுவனம் இப்படி 40 குறிப்புகளை அளித்துள்ளது. அந்தத் தளத்தின் இணைப்பைக் கீழே கொடுத்துள்ளோம்.
கூகுள் செயற்கை நுண்ணறிவு – 40 குறிப்புகள்.
