நேரம் விழுங்கும் சமூகஊடகங்கள்

ஒரு நாளின் பெரும்பகுதியை சமூகஊடகங்களுக்குச் செலவிடும் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதனால் ஏற்படும் விளைவுகளை எத்தனை ஆராய்ச்சிகள் எடுத்துச் சொன்னாலும் தடை என யாராவது சொல்லும்வரை அதனைப் பயன்படுத்துவதை நிறுத்துவதில்லை. 

SocialMedia

சமூகஊடகங்களின் பயன்பாட்டுக்கு எதிரான கருத்துகள் பல ஆண்டுகளாக மெல்ல உருவாகி வந்துள்ளன. குறிப்பாக குழந்தைகளிடம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் இந்த சமூகஊடகங்களைத் தடைசெய்யப் பல நாட்டு அரசுகளும் தற்போது வேலை செய்யத் தொடங்கியிருக்கின்றன. 

கடந்த ஆண்டு பதினாறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னேப்சாட், ரெடிட் உள்ளிட்ட சமூகஊடகங்களைப் பயன்படுத்தக்கூடாது என ஆஸ்திரேலியா அரசு சட்டம் கொண்டுவந்தது. பெற்றோர்களின் அனுமதியோடு கூட இவற்றைப் பயன்படுத்தக்கூடாது. மீறினால் 32.5 மில்லியன் டாலர் வரை அபராதம் விதிக்கப்படும் எனக் கடுமை காட்டியது. கூகுள், மெட்டா, எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் அரசின் இந்த முடிவுக்கு அதிருப்தியைத் தெரிவித்தன. ஐரோப்பிய ஒன்றியமும் இதே நடவடிக்கையை எடுத்தது. அவர்களுடைய இணையப் பாதுகாப்புச் சட்டம் 2023, குழந்தைகளின் இணையவெளிப் பாதுகாப்பு குறித்து விரிவாகப் பேசுகிறது. 

இந்தப் பட்டியலில் இப்போது புதிதாக இணைந்திருக்கும் நாடு இந்தோனீசியா. இருபத்தெட்டு கோடி மக்கள் தொகையைக்கொண்ட இந்தோனீசியாவில் எண்பது விழுக்காட்டினர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். பன்னிரண்டு வயதுக்கும் குறைவானவர்களில் நாற்பத்தெட்டு சதவிகிதம் பேரிடம் இணையத்தைப் பயன்படுத்தும் வசதி இருக்கிறது. பன்னிரண்டு முதல் இருபத்தேழு வயதுடைய ஈராயிரக் குழவிகள் தலைமுறை (Gen Z) பயன்பாட்டாளர்களில் எண்பத்தேழு விழுக்காட்டினரிடம் இணைய இணைப்பு இருக்கிறது.  

நிலைமையைப் புரிந்துகொண்ட இந்தோனீசியாவின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் இது குறித்து அந்த நாட்டுப் பிரதமரிடம் கலந்தாலோசித்திருக்கிறார். இணைய வெளியில் குழந்தைகளைப் பாதுகாப்பது குறித்தான ஆலோசனையின் முடிவில் அதற்கான திட்டங்களைத் தயாரிப்பதில் தீவிரம் காட்டியிருக்கிறார்கள். 

ஆபாசம், வன்முறை நிறைந்த வெளியாக மாறிவிட்ட இந்த சமூகஊடகங்களை முறைப்படுத்துவது அவசியம். அதை இப்போதாவது உணர்ந்து விழித்துக்கொள்வது எதிர்காலத் தலைமுறைக்கு நாம் செய்யும் நன்மையாக இருக்கும்.  

  • அ. பாண்டியராஜன்
சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now