மேக் மினி : மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது

ஆப்பிள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு, இன்று வரை பயன்பாட்டில் உள்ள மேக் மினி (Mac mini) கருவி இருபது வயதை எட்டியுள்ளது. இந்த இருபது ஆண்டுகளில் அது கடந்து வந்த பாதை என்ன, இப்போது அதன் நிலை என்ன என்பது பற்றி பார்த்துவிடுவோம்.

Mac MIni

மேக் மினி கடந்த 2005ஆம் ஆண்டு, அப்போதைய ஆப்பிள் நிறுவனர்‌ ஸ்டீவ் ஜாப்ஸால் அறிமுகப்படுத்தப்பட்டது. பெயருக்கு ஏற்றார் போல மேக் கணினி குறுகிய வடிவம் இது. மேசைக் கணினிக்கு இணையாகச் செயல்படும். மேக் மினி கொண்டுவரப்பட்டதற்கான முக்கியமான நோக்கம், விண்டோஸிலிருந்து ஆப்பிளுக்கு மாறும் பயனர்கள் எளிதாக தங்கள் தரவுகளை நகலெடுப்பதே. அறிமுகப்படுத்தப்பட்ட காலம் முதல் இப்போது வரை ஆப்பிளின் விலை குறைந்த கருவிகளில் ஒன்று இந்த மேக் மினி. 

இதன் வெளியீட்டு விழாவில் ஸ்டீவ் ஜாப்ஸ் பயன்படுத்திய சொல் BYODKM (Bring Your Own Display, Keyboard, and Mouse). இது மேக் மினியின் தாரக மந்திரம் என்றே கூறிவிடலாம். முதல் மேக் மினியில் Power PC G4 செயலகம் இடம்பெற்றிருந்தது. பிப்ரவரி 2006இல், இன்டெல் கோர் சோலோ செயலகத்துடன் பயன்பாட்டிற்கு வந்தது. அதன் அளவை மேலும் குறைக்க விரும்பிய ஆப்பிள், மேக் மினியின் அளவைக் குறைத்து ஜூன் 2010இல் வெளியிட்டது. அதே பதிப்பில் ஒரு HDMI போர்ட் சேர்க்கப்பட்டது.  அதன் பின்னர் பல ஆண்டுகளுக்கு எந்த பெரிய மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

அதன் பின்னர் 2018 மேக் மினி பதிப்பில் தண்டர்போல்ட்(Thunderbolt), இன்டெல் கோர்(Intel core) ஐ3 , ஐ5 அல்லது ஐ7 செயலகம் பயன்படுத்தப்பட்டது. ஆப்பிள் எம்1 சில்லைக் கொண்ட மேக் மினி நவம்பர் 2020இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்குப் பின் வந்த பதிப்புகளில் எம்2 மற்றும் எம்2 புரோ சில்லுகளும் பயன்படுத்தப்பட்டன.

2010க்கு பிறகு, கடந்த 2024 அக்டோபர் மாதத்தில்தான் மேக் மினியின் வடிவம் மாற்றியமைக்கப்பட்டது. இப்புதிய வடிவமைப்பு முந்தைய வடிவங்களைவிட மிகச் சிறியது. அதோடு இதன் முன்புறமும் பின்புறமும் பலவித தேவைகளுக்கான போர்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன‌. இது எம்4 மற்றும் எம்4 புரோ சில்லுகளுடன் வழங்கப்பட்டுள்ளது. அதன் சிறிய அளவு, செயல்பாடுகள் காரணமாக, மேக் மினி பெரும்பாலும் ஹோம் தியேட்டர் அல்லது ஆப்பிள் டிவிக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது. கோப்புகளையும் கோப்புறைகளையும் நண்பர்களுடன் பகிரவும் பலர் பயன்படுத்துகிறார்கள். மேக் கணினிகளை மேக் மினியில் பிரதி எடுக்கவும் பயன்படுகிறது. ஐபோன்கள், ஐபேட்கள், பிற ஆப்பிள் கருவிகளை இணைக்க மேக் மினியைப் பயன்படுத்தலாம்.

  • மு. இசக்கிமுத்து
சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now