கவனம் பெறும் ரெட்நோட்

டிக்டாக் செயலியைத் தடை செய்ய அமெரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட செய்தி பரவத் தொடங்கியதும் பயனர்கள் பதற்றமானார்கள். அதே வேளையில் ரெட்நோட் என்னும் செயலியை இலட்சக் கணக்கானோர் பதிவிறக்கம் செய்தனர். ஓரிரவில் ஆப்பிள் ஸ்டோரில் பதிவிறக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றது ரெட் நோட். 

RedNote

டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டதும் சாதாரண பயனர்கள் தங்களுடைய விருப்பமான பொழுதுபோக்கை இழந்தனர். டிக்டாக்கை வருமானம் ஈட்டும் தளமாகப் பயன்படுத்தி வந்த படைப்பாளிகள் அவர்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குள்ளானதை உணர்ந்தனர். 

தங்கள் தகவல்களைத் தொழில்நுட்ப நிறுவனங்கள் அவர்களுடைய வணிகத்துக்காகப் பயன்படுத்துவதை பெரும்பாலான பயனர்கள் உணர்ந்தே இருக்கின்றனர். அதனால் தகவல்களைச் சீன நிறுவனம் சேகரிப்பதால் தடை செய்கிறோம் என்ற சமாதான சொற்கள் அவர்களுக்குப் போதுமானதாக இல்லை. 

டிக்டாக் தடைக்கான உத்தரவை அமல்படுத்த எழுபத்தைந்து நாள்கள் அவகாசம் கொடுக்கும் உத்தரவில் புதிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார். இருந்தாலும் பயனர்கள் ரெட்நோட் செயலியிலிருந்து திரும்ப வரவில்லை. டிக்டாக் அகதிகள் என அடையாளப்படுத்திக்கொள்ளும் இவர்களின் தற்காலிகப் புகலிடமாக ரெட்நோட் முன்னணியில் இருக்கிறது.

அமெரிக்காவில் ரெட்நோட் என அறியப்படும் இந்த சமூக ஊடகச்செயலியானது சீனாவைச் சேர்ந்த மற்றுமொறு நிறுவனம். ஷாஹோங்சூ (Xiaohongshu) என்பது அதனுடைய இயற்பெயர். சார்ல்வின் மாவோ என்பவரால் 2013ஆம் ஆண்டு சீனாவில் தொடங்கப்பட்டது. 

பயனர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையின் தருணங்களைப் பகிர்ந்துகொள்ளும் தளமாக இருக்கிறது இந்த ரெட்நோட். சீனாவில் அதிக வருமானம் ஈட்டும் மக்களிடையே இந்த செயலி பிரபலமாக இருக்கிறது. அவர்களுடைய பயணப் புகைப்படங்களைப் பகிரவும் உயர்தர உணவகங்களை பரிந்துரைக்கவும் ஆடம்பரமான அலமாரிகளைக் காட்சிப்படுத்தவும் இந்தத் தளத்தை அவர்கள் பயன்படுத்துகின்றனர். இன்ஸ்டாகிராம், பின்ட்ரெஸ்ட் போன்ற தளங்களுக்கான மாற்றாக சீனாவில் செயல்படுகிறது இந்தத் தளம். 

2024ஆம் ஆண்டு கணக்கின்படி இந்தச் செயலியைப் பயன்படுத்தும் மாதாந்திர பயனர்களின் எண்ணிக்கை 300 மில்லியன். ரெட்நோட் செயலியைப் பயன்படுத்துபவர்களில் இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் முப்பத்தைந்து சதவிகிதம் பேர். சீனாவைத் தொடர்ந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் இந்தச் செயலி பரிச்சயமானது. மலேசியாவில் பதினைந்து லட்சம் பயனர்களும் சிங்கப்பூரில் ஐந்து லட்சம் பயனர்களும் இந்தச் செயலியைப் பயன்படுத்துகின்றனர். 

அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கான மாற்றாக ரெட்நோட் நீடித்து நிலைபெறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம். 

  • அ. பாண்டியராஜன்
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now