வாட்சாப் படத்திலும் அழகு கூட்டலாம்

வாட்சாப்பின் அண்மைப் பதிப்பில், அரட்டையில் புகைப்படம் எடுக்கும்போது அதை மேம்படுத்தவும், வாட்சாப் ஒட்டிகள் (stickers) உருவாக்கவும் எளிமையாகப் பகிரவும் புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

whatsapp stickers

உலகம் முழுவதும் கிட்டத்தட்ட முந்நூறு கோடி பேர், தகவல்தொடர்புக்காகப் பயன்படுத்தும் செயலி வாட்சாப். அத்தனை பயனர்களும் வாட்சாப் பயன்படுத்தும்போது சலிப்படையாமல் இருக்கவும், அவர்களுக்கு இருக்கும் குறைகளைக் களையவும் அவ்வப்போது சில புதிய அம்சங்கள் கொண்டுவயப்படுகின்றன. மெட்டா நிறுவனத்தின் பிற செயலிகளான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றிலுள்ள அம்சங்கள் வாட்சாப்பிலும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காகத்தான் காணொளி அழைப்புகளில் புதிய வசதிகள் சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல இப்போது இன்னும் மூன்று அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அதில் முதல் அம்சம், வாட்சாபில் புகைப்படம் எடுக்கும் பயனர்களுக்காகக் கொண்டுவரப்பட்டுள்ளது. உங்கள் விருப்பத்துக்குரியவருக்குப் புகைப்படம் அனுப்பும்போது, குறைகளை வடிகட்டி அழகைக் கூட்டுவதற்காக இனிமேல் இன்ஸ்டாகிராமிற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வாட்சாப்பிலேயே ஏராளமான ஃபில்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

வாட்சாப் குறுஞ்செய்திக்கான எதிர்வினையை எளிமைப்படுத்துவதே அடுத்த அம்சம். முந்தைய பதிப்புகளில் குறுஞ்செய்திகளைத் தொடர்ச்சியாக அழுத்திப் பிடித்தால் மட்டுமே எதிர்வினைகளை வழங்க முடியும். ஆனால் இப்போது குறுஞ்செய்திகளை இருமுறை சொடுக்கினால் எளிதாக எதிர்வினையாற்ற முடியும்.

நீங்களே சொந்தமாக ஒட்டிகளை (Sticker) உருவாக்கிக் கொள்ளும் அம்சமும் இப்போது எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. Create Sticker பொத்தானைச் சொடுக்கி, உங்கள் விருப்பப்படி உருவாக்கிக்கொள்ளலாம். உங்களை சுயபடம் எடுத்து அதில் விதவிதமான வாசகங்களையும் நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம். இப்படி நீங்கள் உருவாக்கியதை எளிமையாகப் பகிர வேண்டும் என்பதற்காக அடுத்த அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. முன்பெல்லாம் நண்பர்களுக்கு இந்த வாட்சாப் ஒட்டிகளைப் பகிர வேண்டுமென்றால், அதனைச் சாதாரண குறுஞ்செய்தியாக அனுப்பி விருப்பங்களில் (Favourites) சேர்க்க வேண்டும். ஆனால் இப்போதைய புதிய அம்சத்தில் வாட்சாப் ஒட்டிகளை குழுக்களாக மொத்தமாகப் பகிரும் வசதியும் கொண்டுவரப்பட்டுள்ளது. இது இப்போதைக்கு ஆண்டிராய்டு இயங்குதள திறன்பேசிகளுக்கு மட்டுமே பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஐஓஎஸிலும் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக இந்த பதிப்பைப் பற்றிக் கூறவேண்டும் என்றால், வாட்சாப் விரும்பிகள் கொண்டாட வேண்டிய பதிப்பு என்றே கூறிவிடலாம்.

  • மு.‌ இசக்கிமுத்து.
சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now