கூகுள் சேமிப்பு நல்லது

கூகுள் செயலில் சேமிக்கும் வசதியைப் பயன்படுத்துவதில் பல நன்மைகள் உள்ளன. கூகுள் பல சேவைகளை வைத்திருந்தாலும் நாம் தேடுபொறி, மின்னஞ்சல், வரைபடம் போன்ற சிலவற்றை மட்டுமே பாவிக்கிறோம். யூட்யூப் போன்ற செயலிகளை இது கூகுளுடையது என்ற உணராமலே பயன்படுத்துகிறோம். கூகுள் ஏகப்பட்ட வசதிகளைச் சேர்ப்பதும் யாரும் சீராட்டவில்லை எனில் அதை நீக்குவதும் வழக்கம்தான். பல வசதிகள் இருப்பது தெரியாமலே இருந்து கொண்டிருக்கும். யாராவது சொல்லும்போதுதான் தெரியும். படங்கள், இணையச் சுட்டிகள், இடங்கள் போன்று பலவற்றைச் சேமிக்கும் வசதியும் அப்படியான ஒன்று.

google saved

நம்மில் அநேகம் பேர் இவ்வசதியைப் பயன்படுத்தியிருக்க மாட்டோம். ஆனால் முயன்று பார்த்தால் தொடர்ந்து பயன்படுத்தத் தூண்டும் களிநயமான சேவை இது. நம்முடைய திறன்பேசி, ஐபேட் போன்ற எந்தத் திறன்கருவியிலும் இது செயல்படும். நம்முடைய திறன்கருவியில் உள்ள கூகுள் செயலியைத் திறந்தால் கீழே Saved எனக்காட்டும். அதைத் தொட்டால் சேமிக்கும் பக்கத்துக்கு இட்டுச் செல்லும். உருவாக்கு என்ற பொத்தானைத் தட்டி விருப்பமான தலைப்பு கொடுத்து தேவைப்படும் விஷயங்களைச் சேமித்து வைக்கலாம்.

ஏதோ ஓர் உணவகத்தைப் பற்றிக் கேள்விப்படுகிறோம். கேட்கும்போதே நாவில் நீர் ஊறும் அளவுக்குச் சுவையான உணவுகள் கிடைப்பதாக அறியப்படும் அவ்வுணவகத்துக்கு ஒரு நாளாவது போக ஆசை வரும். கூகுள் மேப் செயலியில் அதைத் திறந்து அதில் காட்டும் சேமிப்புக் குறியீட்டைத் தட்டினால் போதும். ஆறு மாதங்கள் கழித்து அந்த ஊருக்குப் போகும்போது உணவகத்தின் பெயரும் அதைப் புகழ்ந்து பரிந்துரைத்த நண்பரின் பெயரும் நினைவுக்கு வரவில்லையே மண்டையைச் சொறியாமல் கூகுள் செயலியில் Saved பொத்தானைத் தட்டினால் போதும். பெயரும் வழியும் இருக்கும். 

இணையத் தளச் சுட்டிகளைச் சேமிப்பதும் ஒரு சிக்கலான செயல்தான். கோமியம் மட்டுமல்ல, சோப்புக் கரைசலில் கூட கிருமியைக் கொல்லும் சக்தி இருக்கலாம். அதற்காக அதை அப்படியே குடிக்க முடியாது என்பது நமக்குத் தெரியும். முதன் முதலில் கோமியத்தின் நன்மையைப் பற்றி அய்யம்பேட்டை ஐஐடியில் ஆய்வுக் கட்டுரை வந்தது என்ற யாராவது சொன்னபோதே நாம் கூகுளைக் குடைந்தெடுத்து பல இணையத் தளங்களில் வந்த அறிவியல் கட்டுரைகளைப் படித்து நம் அறிவை மேம்படுத்தியிருப்போம். ஆனால் ஆண்டுக்கொருமுறை யாராவது இதைப் பற்றிப் பேசி நம் நட்பு வட்டத்தில் இருப்பவர்கள் மாட்டுச் சிறுநீரின் மகத்துவம் பற்றிச் சொல்லும்போது அவருக்குக் காண்பிக்க மீண்டும் தேடி நேரத்தை வீணாக்க வேண்டாம். இந்தத் தலைப்பின் கீழே இது தொடர்பான சுட்டிகளை கூகுளில் சேமித்து வைத்திருந்தால் அப்படியே அவருக்கு அனுப்பலாம்.

கூகுள் குரோம் போன்ற இணையஉலாவியிலும் புக்மார்க் மூலம் குறித்துவைக்க முடியும். ஆனால் தலைப்பிட்டு குழுவாகச் சேமிப்பது இன்னும் வசதியாக இருக்கிறது. இப்படிச் சுட்டிகளைச் சேமித்து வைப்பதில் கிடைக்கும் பலன்களுக்கு எல்லையே இல்லை. எதையோ ஒன்றைத் தேடும்போது கிடைக்கும் அவசியமான சுயமுன்னேற்றக் கட்டுரை ஒன்றைப் படிக்க நேரம் இல்லையெனில் அதைச் சேமித்து வைத்துப் பின்னர் படிக்கலாம். ஆன்மிகத்தில் நாட்டம் உடைய உங்கள் அப்பாவுக்குப் பிடிக்கும் என நீங்கள் நினைக்கும் காணொளிகள் கண்ணில்படும்போது சேமித்து வைக்கலாம். அவருக்கு எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போது பார்த்துக்கொள்வார். குடும்பத்தோடு ஆண்டு இறுதியில் விடுமுறைக்குச் செல்ல இருக்கும் நாட்டில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடங்கள், விதிமுறைகள் என அது தொடர்பான அனைத்தையும் ஒரு தலைப்பின் கீழ் சேமித்து வைக்கலாம்.

நம் வீட்டில் சமைக்கப்படும் தனித்துவமான உணவின் செய்முறையை கைப்பட எழுதிப் படமெடுத்துச் சேமித்து வைக்கலாம். சேமிப்பதை நம்முடைய எல்லா திறன்கருவிகளிலும் திறந்து பார்க்க முடியும். அதைவிட முக்கியமாக மற்றவர்களிடம் இதைப் பகிர்வதும் எளிது. தனிப்பட்ட பட்டியல், பகிர்வதற்கான பட்டியல் என்று வகை பிரித்தும் வைத்துக் கொள்ளலாம்.

இப்படிச் சேமிக்கும் விஷயங்களை குறிப்பிட்ட கால இடைவேளைக்குப் பிறகு பார்க்கும்போது நமக்கு எதெல்லாம் பிடிக்கிறது எதிலெல்லாம் ஆர்வம் காட்டினோம் எனத் தெரிந்துகொள்ளவும் முடியும். கூகுள் செயலியைத் திறந்து பார்ப்பது அரிது என்பதால் இந்தச் சேவை இருக்கும் இடம் அதிகம் கண்ணில்படாமல் இருக்கிறது. பயன்படுத்திப் பாருங்கள். நிச்சயம் பிடிக்கும்.

– கோகிலா, சென்னை.

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now