முதலிடத்தில் டீப்சீக்

ஆப்பிள் ஆப்ஸ் ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கம் செய்த செயலிகளில் முதலிடம் பெற்றது டீப்சீக். இச்செய்தி உலகளாவிய பங்குச்சந்தைகளில் எதிரொலித்தது.

உரையாடக்கூடிய செயற்கை நுண்ணறிவு செயலியாக சாட்ஜிபிடி அறிமுகமாகி சில காலம்தான் ஆகிறது. கூகுள் நிறுவனத்துக்கு இனிமேல் எதிர்காலமே கிடையாது. ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி செயலிதான் கோலோச்சும். இப்படியெல்லாம் என்னென்னவோ சொன்னார்கள். கூகுள் எங்களிடமும் இம்மாதிரி செயலி இருக்கிறது என்று ஜெமினி ஏஐ பற்றிய அறிவிப்பை வெளியிட்டது. அந்த விளம்பரத்திலேயே ஒரு தவறு இருந்ததால் நிறுவனத்தின் மதிப்பு சரிந்ததெல்லாம் பழைய கதை. 

Deepseek

சாட்ஜிபிடி முடிசூடா மன்னராகத் திகழ முடியாமல் அடுத்தடுத்து பல செயலிகள் வந்தன. என்றாலும் போட்டியில் முன்னணியில் இருந்தது சாட்ஜிபிடி செயலிதான். அண்மையில் அதை மாற்றி எழுதியது ஒரு புது செயலி. சீனாவின் டீப்சீக் செயற்கை நுண்ணறிவுச் செயலி சாட்ஜிபிடி போலவே கதை சொல்லும், கவிதை எழுதும், கணக்குப் போடும். நிரல் எழுதுவதிலும் நன்றாகவே செயல்படுகிறது. இவை எல்லாவற்றையும்விட கட்டணம் குறைவு.

சீனாவுடன் எதில் வேண்டுமானாலும் போட்டியிடலாம். குறைந்த கட்டணத்துடன் போட்டியிடுவது சற்று சிரமம்தான். செயலியின் தரமும் நன்றாக இருக்கிறது, செலவும் குறைவு என்றதும் மக்கள் ஆர்வமாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தினர். ஆப்பிளில் அதிகம் பதிவிறக்கம் செய்த செயலிகளின் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்தது. இந்தச் செய்தி பரவியதுதான் தாமதம். அமெரிக்கப் பங்குச்சந்தையில் அடி பலம். 

செயற்கை நுண்ணறிவு தொடர்பான நிறுவனங்கள் மட்டுமின்றி, அந்நிறுவனங்களுக்கு வன்பொருள் தயாரிக்கும் நிறுவனங்கள்கூட மதிப்பிழந்தன. துக்குணி அளவுள்ள நிறுவனம் டோக்கியோ முதல் ஆம்ஸ்ட்ரடாம் வரை எல்லா பங்குச்சந்தைகளையும் ஆட்டம் காண வைத்துள்ளது.

தென்கிழக்குச் சீன நகரம் ஒன்றைச் சேர்ந்த லியாங் வெங்பெஃங் என்பவரால் தொடங்கப்பட்டது 2023ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது டீப்சீக். ஆரம்பப்பள்ளி ஆசிரியரின் மகன். மின்னணு பொறியியலில் பட்டம் பெற்றவர். பயங்கரமான சிகையலங்காரத்துடன் இருக்கும் மெத்தப் படித்தவர் என்பது அவரைப் பற்றிய கருத்தாகப் பலரிடம் இருந்திருக்கிறது. பங்குச்சந்தையில் வணிகம் செய்து கொண்டிருந்த லியாங் கவனத்தை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் ஈர்த்தது. கணக்குப் போட்டு முதலீடு செய்ய கணினி உதவி செய்தால் எப்படி இருக்கும் என்ற யோசனை உதித்தது. 

செயற்கை நுண்ணறிவு பரிந்துரையில் செயல்படும் முதலீட்டு யோசனை நிறுவனம் நன்றாகத்தான் போகிறது. கூடவே டீப்சீக் செயலியும் அறிமுகப்படுத்தினார். அவர் நிர்ணயித்த குறைந்த கட்டணத்தால் பைடான்ஸ், பைடு, அலிபாபா உள்ளிட்ட மற்ற சீன நிறுவனங்களும் கட்டணத்தைக் குறைக்க வேண்டியதாயிற்று.

டீப்சீக் பயன்படுத்தும் மொழிமாதிரி குறைந்த செலவில் நிறைவான பலனைத் தரும் செயலியாக உருவாக்கப்பட்டுள்ளது. எனவே மற்றவர்கள் நட்டத்திற்கு வியாபாரம் செய்ய இவரோ லாபத்தில் நடத்தினார். அப்படியே வாய்ச்சொல் விளம்பரம் பரவி, அமெரிக்க செயற்கை நுண்ணறிவுச் செயலிகள் சந்தையிலும் புகழ்வீச்சைப் பெற்றது டீப்சீக். அது பங்குச்சந்தையில் கலவரத்தை உண்டாக்கிவிட்டது. போட்டி கூடினால் பயனர்களுக்குக் கொண்டாட்டம்தான். டீப்சீக் திமிங்கிலமாக மாறி மற்ற நிறுவனங்களை விழுங்காமல் இருந்தால் சரி.

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now